சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) ஹேசல் புவா எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (மார்ச் 31) ஜூரோங் வெஸ்ட் பகுதியில் தொகுதி உலா சென்ற போது திருவாட்டி புவா ‘சிஎன்ஏ’விடம் இதைத் தெரிவித்தார்.
தாம் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடுவதா அல்லது தனித்தொகுதி ஒன்றில் போட்டியிடுவதா என்பதைச் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி முடிவெடுக்கும் என்று திருவாட்டி புவா கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலில் திருவாட்டி புவா வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது அந்தத் தொகுதி வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொண்டூழியர்களும் திருவாட்டி புவாவும் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81இல் உள்ள 815, 851 காப்பிக் கடைகளில் தொகுதி உலா மேற்கொண்டனர்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளராகச் செயலாற்றிய தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் புவா, சில நாள்களுக்கு முன் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார்.
தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் விலகிய திரு லியோங் மன் வாய் மீண்டும் அந்தப் பதவியை ஏற்றுள்ளார். திருவாட்டி ஹேசல் புவா கட்சியின் முதலாம் துணைத் தலைவராகச் செயல்படுகிறார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி காப்பிக் கடைகளைவிட்டுச் சென்ற பிறகு மக்கள் செயல் கட்சியின் அங் வெய் நெங் தொகுதி உலா மேற்கொண்டு மக்களிடம் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் நன்யாங் பகுதிக்குத் திரு அங் வெய் நெங் பொறுப்பு வகிக்கிறார்.
வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத் தொகுதியில் பிஎஸ்பி அணியை மீண்டும் எதிர்கொள்ள வாய்ப்புள்ளதா என்று கேட்டபோது, தமது அணி அந்தப் பகுதியில் செய்துள்ள பணிகளைப் பற்றி குடியிருப்பாளர்கள் நன்கு அறிந்துள்ளார்கள் என்றும் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அவர்களே “சிறந்த நடுவராக” இருப்பார்கள் என்றும் திரு ஆங், சேனல் நியூஸ் ஏஷியாவிடம் கூறினார்.

