ஹாலந்து-புக்கிட் தீமாவில் போட்டியிட வேட்பாளர்களைத் தேடுகிறது சிஜக

2 mins read
d8984469-62bf-4bac-8913-e9f58aad8359
புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர்களுடன் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) கலந்துரையாடிய சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் பால் தம்பையா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் களம் கண்ட எதிர்க்கட்சியான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிஜக) இம்முறை அங்கு போட்டியிட யோசித்து வருகிறது.

நால்வர் கொண்ட அணியை அந்தத் தொகுதியில் களமிறக்க நல்ல வேட்பாளர்களை அந்தக் கட்சி தேடி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

அந்தக் கட்சியின் தலைவர் பால் தம்பையா, புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர்களைச் சந்திக்க செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) தொகுதி உலா மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் போட்டியிடுவதற்கான தமது கட்சியின் தெரிவுகளை இன்னும் ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

“எங்களிடம் நல்ல வேட்பாளர்கள் உள்ளனரா என்பதை மதிப்பிடுகிறோம். ஹாலந்து-புக்கிட் தீமா தொகுதி குடியிருப்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பை எங்களால் அளிக்க இயலுமா என்று யோசிக்கிறோம். அதற்காக, இயன்ற வரை எல்லா சாதக அம்சங்களையும் பரிசீலிக்கிறோம்,” என்று பேராசிரியர் தம்பையா கூறினார்.

வேட்பாளர்களைத் தேர்ந்து எடுக்க, கட்சியில் இருந்தும் வெளியில் இருந்தும் பலரை வரவழைத்து நேர்காணல் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“மிகவும் தகுதியானவர்கள் வந்து எங்களிடம் பேசுகிறார்கள். அவர்களைப் பற்றி அவ்வளவாக எங்களுக்குத் தெரியாவிட்டாலும் அவர்களுடன் கலந்துபேசி, நேர்காணலை வேகமாக நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம்,” என்றும் குறிப்பிட்டார் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை தொற்றுநோய்ப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகரான திரு தம்பையா.

புக்கிட் தீமா-ஹாலந்து குழுத்தொகுதியில் போட்டியிடுவது குறித்து பேச்சு நடத்த இதர இரண்டு அரசியல் கட்சிகளின் தலைமைச் செயலாளர்களிடம் இருந்து தமது கட்சிக்கு அழைப்புகள் வந்ததாகவும் கூறிய அவர், அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அந்தத் தொகுதியில் கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு எதிராக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. இருப்பினும், எந்த ஒரு தேர்தலிலும் அந்தக் கட்சி வெற்றி பெறவில்லை.

மாறாக, மசெக 2011 தேர்தலில் 60.08%, 2015ல் 66.6%, 2020ல் 66.36% வாக்குகளுடன் அந்தத் தொகுதியில் வெற்றி கண்டது.

குறிப்புச் சொற்கள்