குடியிருப்பாளர்களின் பிரச்சினைகளைக் கேட்க மக்கள் தொடர்புக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், மக்கள் சந்திப்புக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைத்தல், தொகுதிப் பணிகளை நிர்வகிக்க முழுநேர எம்.பிக்கள் போன்ற சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் சீ சூன் ஜுவானின் பரிந்துரைகளுக்குச் செம்பவாங் வெஸ்ட் தனித் தொகுதி வேட்பாளர் திருவாட்டி போ லி சான், 50, விளக்கமளித்துள்ளார்.
“அவையெல்லாம் மக்கள் செயல் கட்சி (மசெக) நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுபற்றிய புரிதல் இன்றிச் சொல்லப்படும் கருத்துகள்,” என்றார் அவர்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 28) சன் பிளாசா அருகே நடந்த மசெக பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.
சாங்கி விமான நிலையக் குழுமத்தின் மூத்த துணைத் தலைவராக இருக்கும் திருவாட்டி போ, “மக்கள் சந்திப்பு என்பது குடியிருப்பாளர்கள் தங்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசப் பாதுகாப்பான, தனிப்பட்ட இடமாகும். அது பொது அரசியல் அரங்கத்திற்கான பொதுக்கூட்டம் அல்ல,” என்றார் அவர்.
“அனைவரையும் சந்திப்பதால் சிலநேரங்களில் சந்திப்பு நேரம் பல மணி நேரம் நீடிக்கலாம். யாரும் பார்க்காதபோது நாங்கள் பணியாற்றுகிறோம்,” என்ற அவர் நேரவிரயத்தைத் தவிர்க்க, குடியிருப்பாளர்களின் மின்னஞ்சல்களுக்கு நேரடியாகப் பதிலளிப்பதாகக் கூறினார். குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி அறிய, தொகுதி உலா, குடியிருப்பு வருகைகளின்போது அவர்களை நேரில் சந்திக்கிறார்.
“மக்கள் சந்திப்பு நேரத்தில் மட்டுமின்றி, ஒவ்வொருநாளும், உதவி தேவைப்படும்போதெல்லாம், நான் குடியிருப்பாளர்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன்,” என்றார் அவர்.
“டாக்டர் சீ, நீண்ட காலம் அரசியலில் இருக்கலாம், ஆனால் அதில் அவர் சமூகத்திற்கு சேவையாற்றியதில்லை,” என்றார் திருவாட்டி போ லி சான்.