ஆய்வாளர்கள்: தேர்தல் நெருங்க இணைய மிரட்டல் பெருகக்கூடும்

2 mins read
a727d92b-dad9-40a8-ae20-9de19c3c760c
இணைய மிரட்டல். - கோப்புப் படம். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நேரடியான அல்லது மறைமுகமான மின்னிலக்கத் தலையீடு தொடர்பான சம்பவங்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.

சொந்தத் தரவு, மின்னிலக்க கட்டமைப்புகள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

பொய்த்தகவல்கள், திரிக்கப்பட்ட படைப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக துரிதமாகச் செயல்பட தொழில்நுட்ப நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் குறித்து விழிப்புடன் இருக்கப்போவதாக அரசாங்கம் கோடிகாட்டியுள்ளது.

இனிவரும் தேர்தல் சிங்கப்பூரின் மீள்திறனுக்கு முக்கியமான சோதனையாக இருக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

இணைய மிரட்டலைத் தாண்டி, அரசியல் நடைமுறைகளை வெளிநாட்டுத் தலையீட்டிலிருந்தும் இனப் பாகுபாட்டை ஏற்படுத்தும் எடுத்துரைப்புகளிலிருந்தும் பாதுகாக்கும் திறன் சோதிக்கப்படலாம்.

வேட்பாளர்களும் கட்சிகளும் சமூக ஊடகங்களைத் தங்கள் பிரசாரத்திற்காக அதிகம் பயன்படுத்துவதால் தேர்தல்களில் மின்னிலக்கமயமாதல் அதிகமாகின்றன.

இதனைத் தொடர்ந்து புதிய இணையப் பாதுகாப்பு மிரட்டல்களும் உருவாகி பெருகி வருவதாக ‘டிஜிசர்ட்’ (DigiCert) என்ற மின்னிலக்கப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆசிய பசிஃபிக் குழுமத்தின் துணைத்தலைவர் ஜேம்ஸ் தெரிவித்தார்.

அதிக இடையூறுகளாலும் எடுத்துரைப்புகளாலும் இந்தக் காலகட்டத்தில் அரசியல்வாதிகள் கூடுதலான அபாயத்தை எதிர்நோக்கக்கூடும் என்று எஸ். ராஜரத்தினம் அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த இணை ஆய்வாளர் யூஜீன் டான் தெரிவித்தார்.

பிற அரசாங்கங்களுடன் தொடர்புடைய தரப்புகளிலிருந்து ஏற்படும் மிரட்டலைச் சுட்டிய திரு டான், அவை எப்போதும் இருந்து வந்ததாகவும் அவை குடியரசின் செயல்பாடுகளில் இடையூறுகளை விளைவிற்பதற்கான வாய்ப்பைத் தேடி வருவதாகவும் கூறினார்.

இத்தகைய குழுக்கள், தங்கள் தாக்குதல்களை மேற்கொள்ள தேர்தல் நேரத்தை நல்ல சமயமாகக் காணக்கூடும்.

சிங்கப்பூரின் குறுகிய தேர்தல் பிரசார காலகட்டத்தின்போது இணைய மிரட்டல்களைப் புலனாய்வு செய்வதற்கு நேரம் இருக்காது.

பிற அரசாங்கங்களுடன் தொடர்புள்ள நடிகர்கள், தங்கள் சொந்த தேசிய நலன்களுடன் ஒத்துப்போகக்கூடிய கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் முடிவைச் சாதகமாகத் திருப்பக்கூடும் என கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் ஏற்பட்ட அண்மைப் பொதுத்தேர்தலில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. டிசம்பரில் 2024ல் வெளிநாடு சார்ந்த பொய்த்தகவல் இயக்கம் தனது நாட்டில் நடத்தப்பட்டதை அறிந்த ருமேனியா, தன் அதிபர் தேர்தல் முடிவை ரத்து செய்தது.

குறிப்புச் சொற்கள்