2025 பொதுத் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் தனியாகவும் அணியாகவும் போட்டியிடத் தயாராகி வருகின்றன. சில தொகுதிகளில் பலமுனைப் போட்டி ஏற்படக்கூடிய நிலையில் இதற்கு முன்னர் ஒரே தொகுதியில் பல கட்சிகள் களமிறங்கிய வரலாற்றைப் பார்ப்போம்.
1991 பொதுத் தேர்தலில் ஐந்து தனித் தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. புக்கிட் மேரா, புக்கிட் தீமா, சுவா சூ காங், ஜூரோங், தங்ளின் ஆகியன அவை.
1997 பொதுத் தேர்தலில் முதல்முறை பலமுனைப் போட்டி நிலவியது. சுவா சூ காங் தனித் தொகுதியில் மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் ஒரு சுயேச்சை வேட்பாளரும் போட்டியிட்டனர்.
அதே தேர்தலில் புக்கிட் கோம்பாக் தனித் தொகுதியில் மும்முனைப் போட்டியும் ஏற்பட்டது.
பின்னர், 2001 தேர்தலில் புக்கிட் தீமா தனித் தொகுதியிலும் பத்தாண்டுகள் கழித்து 2011 தேர்தலில் பெங்கோல் ஈஸ்ட் தனித் தொகுதியிலும் மூவர் போட்டியிடும் நிலைமை இருந்தது.
2015 பொதுத் தேர்தலில் எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இருந்தது. சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்ததுமுதல், அந்தத் தேர்தலில்தான் முதன்முறையாக எல்லாத் தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் களம் இறங்கின.
அந்தத் தேர்தலில் ராடின் மாஸ், புக்கிட் பாத்தோக், மெக்பர்சன் ஆகிய தனித் தொகுதி ஒவ்வொன்றிலும் மூவர் களமிறங்கினர்.
முடிவில், ராடின் மாஸில் 77.3% வாக்குகளுடன் மசெகவின் திரு சேம் டான் வென்றார். சீர்திருத்தக் கட்சியின் திரு குமார் அப்பாவு 12.7% வாக்குகளைப் பெற்ற நிலையில், 10% வாக்குகளைப் பெற்ற சுயேச்சை வேட்பாளர் திருவாட்டி ஹான் ஹுயி ஹுயி தமது வைப்புத் தொகையை இழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
புக்கிட் பாத்தோக் தொகுதியில் மசெக வேட்பாளர் திரு டேவிட் ஓங் 73% விழுக்காட்டு வாக்குகளுடன் வென்ற நிலையில், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் திரு சதாசிவம் வீரையா 26.4% வாக்குகளைப் பெற்றார். 0.6% வாக்குகளுடன் சுயேச்சை வேட்பாளர் திரு சமீர் சலீம் நெஜி வைப்புத்தொகையை இழந்தார்.
மெக்பர்சன் தனித்தொகுதியில் மசெகவின் திருவாட்டி டின் பெய் லிங் 65.6% வாக்குகளுடன் வென்றார். எதிர்த்துக் களமிறங்கிய பாட்டாளிக் கட்சியின் திரு சென் ஜியாஸிக்கு 33.6% வாக்குகள் கிடைத்தன. மூன்றாவதாகப் போட்டியிட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் வேட்பாளர் திரு சியோ சாய் சென் 0.82 வாக்குகளுடன் வைப்புத்தொகையை இழந்தார்.
2015 பொதுத் தேர்தலுக்கான வைப்புத்தொகை $14,500ஆக இருந்தது.
வைப்புத் தொகையைத் திரும்பப் பெற ஒரு வேட்பாளர், தாம் போட்டியிட்ட தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 12.5% வாக்குகளைப் பெற வேண்டும்.
2020 பொதுத் தேர்தலில் எந்தெந்தத் தொகுதிகளில் மும்முனைப் போட்டி இருந்தது என்பதை பின்னர் பார்ப்போம்.