வாக்குகளை அள்ளிய 2020 தேர்தல்

2 mins read
cc0412b8-1024-45db-a9eb-fc7ecf70da2e
வாக்களிக்காதவர்களின் பெயர் வாக்காளர் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாளை (மே 3) கிழக்கு விழிக்கும்போது வாக்கு அட்டையுடன் ஜனநாயகக் கடமை ஆற்ற நாம் தயாராகிவிடுவோம்.

நிச்சயமற்ற உலகில் நின்று யோசிக்கும் முன்னேற்றம்; எதிர்காலம் என்னவாகும் என்று உலகத்தை உலுக்கும் கேள்வி. இவற்றுக்கு நடுவே, நமது பொதுத் தேர்தல்.

இந்தத் தேர்தலில், போட்டியில்லாத ஐந்து தொகுதிகளைத் தவிர்த்து, 92 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2023 அதிபர் தேர்தலுக்குப் பிறகு ஏறத்தாழ 67,000 பேர் புதிதாக வாக்களிக்க உள்ளனர்.

வாக்களிப்பது கட்டாயம் என்பதால் வாக்காளர் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள எல்லா சிங்கப்பூர்க் குடிமக்களும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் துறை வலியுறுத்துகிறது. தவிர்க்க இயலாத காரணத்தால் வெளிநாடு சென்றது, வாக்கு செலுத்த இயலாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். கடுமையான உடல்நலப் பாதிப்பு, பிரசவம் போன்றவை செல்லத்தக்க பிற காரணங்கள்.

வாக்களிக்கத் தவறுவோரின் பெயர், தேர்தலுக்குப் பிறகு வாக்காளர் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும். பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு செய்யத் தவறினால் அடுத்த தேர்தலில் வாக்களிக்க இயலாது.

சிறைக் கைதிகள்

சிறைச்சாலை, போதையர் மறுவாழ்வு நிலையம் போன்றவற்றில் வாக்களிக்க எந்த ஏற்பாடும் செய்யப்படுவதில்லை. அவற்றில் அடைக்கப்பட்டோர் வாக்களிக்க இயலாது என்பதால், அவர்களின் பெயர் வாக்காளர் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும். விடுதலையாகி வெளியே வந்த பின்னர், பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

செல்லுபடியாகும் காரணங்கள் தவிர, மற்ற வேளைகளில் பெயரை மீண்டும் சேர்க்க கட்டணம் செலுத்த வேண்டும்.

2020 பொதுத் தேர்தல் ஒரு வித்தியாசமான களம். குரல்வளையை நெரித்த கொரோனா நெருக்கடி காலத்தில் நடைபெற்ற அந்தத் தேர்தலின்போது நேரடி பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவில்லை. எல்லாத் தொகுதிகளிலும் போட்டி இருந்ததால் 2015க்குப் பிறகு எல்லா சிங்கப்பூரர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. அப்போது, 95.8 விழுக்காட்டு வாக்குகள் பதிவாயின. இருபது ஆண்டுகளில் அதுவே ஆக அதிகம்.

கடந்த ஐந்து பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பு நடைபெற்ற நாளும் வாக்குப்பதிவு விவரமும்:

2020 - 95.80% (2020 ஜூலை 10, வெள்ளி)

2015 - 93.70% (2015 செப்டம்பர் 11, வெள்ளி)

2011 - 93.20% (2011 மே 7, சனி)

2006 - 94.00% (2006 மே 6, சனி)

2001 - 94.60% (2001 நவம்பர் 3, சனி)

போட்டி இருந்த தொகுதிகளில் பதிவான வாக்கு விகிதம் இவை. வெளிநாடுகளில் பதிவான வாக்குகளும் இதனுள் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்