தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரசார ஓய்வுநாளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

2 mins read
4f29eb0f-528d-4290-b146-54488a0d85ff
பிரசார ஓய்வு நாளில், ஒரு கட்சியை அல்லது வேட்பாளரை ஆதரிக்கும் வகையில் சின்னங்கள், கொடிகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதும் அணிந்துகொள்வதும் கூடாது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாக்களிப்புக்கு முதல் நாள் பிரசார ஓய்வு நாள். அன்றைய நாளில் பிரசார நடவடிக்கைளுக்கும் தேர்தல் விளம்பரங்களுக்கும் அனுமதி இல்லை.

மே 1 நள்ளிரவுக்குப் பின்னர் பிரசார ஓய்வு நாள் தொடங்கும். மறுநாள் நள்ளிரவு வரை அது நடப்பில் இருக்கும். வாக்களிக்கும் முன்னர், பிரசாரக் களத்தில் ஒவ்வொரு வேட்பாளரும் முன்வைத்த அம்சங்களை வாக்காளர்கள் சீர்தூக்கிப் பார்க்க அந்த நாள் அவர்களுக்கு உதவும்.

2011 பொதுத் தேர்தலில் இருந்து பிரசார ஓய்வுநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான விதிகள் வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் ஆகிய அனைவருக்கும் பொருந்தும்.

புதிய தேர்தல் விளம்பரங்களை வெளியிடுவதும் பதாகைகள், கொடிகள், சுவரொட்டிகள் போன்றவற்றை பொதுவெளியில் காட்சிப்படுத்துவதும் கூடாது. ஏற்கெனவே உள்ள விளம்பரங்களில் மாற்றம் செய்யக்கூடாது. இணையம், இணையம் அல்லாத தேர்தல் விளம்பரங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

பிரசார ஓய்வு நாள் தொடங்குவதற்கு முன்னர் காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்குத் தடை இல்லை.

மீண்டும் பகிர்வது, மீண்டும் பதிவேற்றுவது, இணைய பிரசாரத்தை ஊக்குவிப்பது ஆகியவற்றை இலவசமாகவோ கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்யக்கூடாது.

வீடு வீடாகச் சென்றும் தொகுதியில் நடந்து சென்றும் வாக்கு சேகரிக்கக்கூடாது. பிரசார வாசக அட்டைகளை விநியோகிக்கக்கூடாது. பிரசாரத்திற்கான வாகனங்களையும் பயன்படுத்தக்கூடாது.

ஒரு கட்சியை அல்லது வேட்பாளரை ஆதரிக்கும் வகையில் சின்னங்கள், கொடிகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதும் உடைகளில் அணிந்துகொள்வதும் கூடாது.

வேட்பாளர் மட்டும் கட்சியின் சின்னத்தை அணிந்துகொள்ளலாம்.

வாக்காளர்களிடம் வேட்பாளரோ கட்சியினரோ பேசும் வகையிலான கூட்டங்கள், பேரணிகள், ஒன்றுகூடல்கள் போன்றவற்றை நடத்தக்கூடாது.

குறிப்புச் சொற்கள்