தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முக்கியத் தலைவர்களின் களம் எது: மசெக, பாட்டாளிக் கட்சியில் நீடிக்கும் மர்மம்

2 mins read
d975fe06-320f-47a0-85f6-60b77c2670ab
முக்கிய தலைவர்களும் புதிய வேட்பாளர்களில் சிலரும் போட்டியிடும் தொகுதிகள் எவை என இன்னும் அறிவிக்கப்படவில்லை. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 5

வேட்புமனுத் தாக்கல் தினம் புதன்கிழமை (ஏப்ரல் 23) நடைபெற இருக்கும் வேளையில், ஆளும் மக்கள் செயல் கட்சி (மசெக), எதிர்த்தரப்பு பாட்டாளிக் கட்சி ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் எந்ததெந்தத் தொகுதிகளில் களமிறங்குவார்கள் என்பது மர்மமாக உள்ளது.

மே 3 பொதுத் தேர்தலுக்கு மசெக அறிமுகம் செய்துள்ள 32 புதிய வேட்பாளர்களில் 28 பேர் எந்தெந்தத் தொகுதியில் போட்டியிடுவார்கள் என்ற விவரத்தை அக்கட்சி அறிவித்து விட்டது.

அதேநேரம், பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஈஸ்ட் கோஸ்ட், பொங்கோல், தஞ்சோங் பகார் ஆகிய குழுத் தொகுதிகளில் யாரைக் களமிறக்க மசெக திட்டமிட்டுள்ளது என்னும் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அதனால், முக்கிய தலைவர்களில் சிலர் தொகுதி மாறி போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் தினத்தில் அந்தக் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.

குறிப்பாக, ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் மசெக தூணாகக் கருதப்படும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அங்கேயே தொடருவாரா, வேறு தொகுதியில் போட்டியிடுவாரா அல்லது அரசியலில் இருந்து ஓய்வுபெறுவாரா என்ற கேள்விகளுக்கான விடையும் தெரிந்துவிடும்.

அதேநேரம், புதிய பொங்கோல் குழுத் தொகுதிக்கான மசெக அணிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்பதும் மர்மமாக உள்ளது. பாட்டாளிக் கட்சி அந்தத் தொகுதியைச் சுற்றிச் சுற்றி வருவதால் தனது அணியை அங்கு நிறுத்தக்கூடும் என்ற ஊகம் எழுந்துள்ளது.

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள பாசிர் ரிஸ்-சாங்கி குழுத் தொகுதிக்கு மாறிவிட்டதால், தஞ்சோங் பகார் குழுத் தொகுதியில் அவருக்கு இணையாக யார் களமிறங்குவார் என்பதும் இன்னும் கேள்வியாக உள்ளது.

மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனுக்கு மாற்றாக குமாரி இந்திராணி பாசிர் ரிஸ்-சாங்கியில் நிறுத்தப்பட்டுள்ளதால், திரு டியோ எங்கு போட்டியிடுவார் என்பதும், ஒருவேளை பொங்கோல் குழுத் தொகுதியில் நிற்பாரா என்பதும் நீடிக்கும் கேள்விகள்.

குவீன்ஸ்டவுன், ராடின் மாஸ் ஆகிய தனித் தொகுதிகளுக்கான மசெக வேட்பாளர்களும் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி அறிமுகம் செய்துள்ள 14 புதிய வேட்பாளர்களில் இருவருக்கான தொகுதியை மட்டுமே அக்கட்சி அறிவித்து உள்ளது. எஞ்சியவர்கள் எங்கு போட்டியிடுவார்கள் என்ற கேள்வியோடு வேட்புமனுத் தாக்கல் தினத்தில் மேலும் பலரை அது அறிமுகம் செய்யுமோ என்ற கேள்வியும் இணைந்துள்ளது. அக்கட்சியின் அறிமுக வேட்பாளர்களில் ஹர்பிரீத் சிங் நேஹாலும் ஒருவர். 59 வயதாகும் அவர் சட்ட நிறுவனம் ஒன்றின் நிர்வாகப் பங்காளியாக உள்ளார்.

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தலைவர் சில்வியா லிம், துணைத் தலைவர் ஃபைசல் மனாப், கொள்கை ஆய்வுப் பிரிவின் தலைவர் ஜெரல்ட் கியம் ஆகியோர் அல்ஜுனிட் குழுத் தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறுவார்களா என்பது வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ள பெரிய கேள்வி.

ஒருவேளை, ஈஸ்ட் கோஸ்ட் அல்லது பொங்கோல் குழுத் தொகுதிகளில் அவர்கள் போட்டியிடுவார்களா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ஆக, வேட்புமனுத் தாக்கல் தினத்தில் பல வியப்புகளுக்கு இடமுண்டு என்பதை இவை உணர்த்துகின்றன.

குறிப்புச் சொற்கள்