பாட்டாளிக் கட்சி மே 3 பொதுத் தேர்தலில் போட்டியிட இருக்கும் மேலும் மூன்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
கேலாங்கில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) அக்கட்சி அறிவித்த அந்த மூன்று வேட்பாளர்களும் புதுமுகங்கள்.
திரு ஜேக்சன் ஆவ் சீ மெங், 35, திருவாட்டி பெரிஸ் வி. பரமேஸ்வரி, 51, திரு மைக்கல் திங் குவான் வெய், 37, ஆகியோர் அம்மூவர்.
இவர்களையும் சேர்த்து பாட்டாளிக் கட்சி 14 புதுமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான திரு ஜேக்சன், லண்டன் பங்குச் சந்தைக் குழுமத்தின் நிறுவன விவகாரப் பிரிவு மூத்த மேலாளராக உள்ளார்.
திருவாட்டி பெரிஸ் வி. பரமேஸ்வரி முன்னாள் அமெரிக்கக் கடற்படைப் பாதுகாப்பு நிர்வாக அதிகாரி ஆவார்.
மூன்றாமவரான திரு மைக்கல் புதிய தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயலாக்க அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
வேட்பாளர் அறிமுகம் தொடர்பாகக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கும் கட்சித் தலைவர் சில்வியா லிம்மும் இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அறிவிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களும் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவர் என்ற விவரத்தை அவர்கள் வெளியிடவில்லை.
பாட்டாளிக் கட்சியில் இணையவும் தேர்தலில் போட்டியிடவும் ஆர்வமுள்ளோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதா என்று திரு பிரித்தம் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அவர், “பொதுமக்களுக்கான சேவையில் தீவிரமாக ஈடுபடவும் கட்சியில் பங்களிக்கவும் விரும்புவோரைத் தேடுவதில் நாங்கள் எப்போதும் கவனம் செலுத்தி வருவோம்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கட்சியில் இணைவோரின் திறன் என்பது, வெவ்வேறு வாழ்க்கைச் சூழலில், வெவ்வேறு வயதுப் பிரிவில், வெவ்வேறு பின்னணியில் இருந்து வருவோரைப் பொறுத்தது.
“இந்தத் தேர்தலில் சிங்கப்பூரர்களுக்காக பாட்டாளிக் கட்சி எதனை முன்வைக்கிறது என்பதே முக்கியம்,” என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக வெளிப்படைத்தன்மையிலும் பத்திரிகைச் சுதந்திரத்திலும் தமக்கு மிகவும் நம்பிக்கை உண்டு என்றார்.
மற்றொரு வேட்பாளரான திரு திங், ஹார்வர்ட் கென்னடிக் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். பாட்டாளிக் கட்சியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்களித்த அனுபவம் அவருக்கு உண்டு.