தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை (மே 1) ஆறு கட்சிகளின் 11 பிரசாரக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
பொது விடுமுறையாக இருப்பதாலும் பிரசாரக் கூட்டங்களுக்கு கடைசி நாளாக இருப்பதாலும் அன்றைய தினம் பெருங்கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறு கட்சிகளுக்கும் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கும் பிரசாரக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை (ஏப்ரல் 30) அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
மக்கள் சக்திக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, பாட்டாளிக் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி, மக்கள் செயல் கட்சி ஆகியன அனுமதிபெற்ற ஆறு கட்சிகளாகும்.
சுயேச்சை வேட்பாளரான ஜெரிமி டானுக்கும் பிரசாரக் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹவ்காங் தனித்தொகுதிக்கான பாட்டாளிக் கட்சியின் கூட்டம் ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியிலும் மவுண்ட்பேட்டன் தனித்தொகுதிக்கான சுயேச்சை வேட்பாளரின் கூட்டம் ‘ஹோம் ஆஃப் அத்லடிக்ஸ்’ என்ற இடத்திலும் பயனியர் தனித் தொகுதிக்கான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் கூட்டம் ஜூரோங் வெஸ்ட் விளையாட்டரங்கிலும் பொத்தோங் பாசிர் தனித் தொகுதிக்கான மக்கள் செயல் கட்சியின் பொதுக் கூட்டம் செயின்ட் ஆண்ட்ருஸ் தொடக்கக் கல்லூரியிலும் செம்பவாங் வெஸ்ட் தனித் தொகுதிக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் கூட்டம், எவர்கிரீன் தொடக்கப்பள்ளியிலும் அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கான மக்கள் செயல் கட்சியின் கூட்டம் சிராங்கூன் அரங்கத்திலும் நீ சூன் குழுத் தொகுதிக்கான ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் கூட்டம், ஃபுட்சால் ஆரினா@ஈஷுன் அருகே யீஷுன் சென்டிரல் வழியாக உள்ள திடலிலும் பொங்கோல் குழுத் தொகுதிக்கான மக்கள் செயல் கட்சியின் கூட்டம், யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியிலும், செங்காங் குழுத் தொகுதிக்கான மக்கள் செயல் கட்சியின் கூட்டம், நார்த் விஸ்டா உயர்நிலைப் பள்ளியிலும், தெம்பனிஸ் குழுத் தொகுதிக்கான மக்கள் சக்திக் கட்சியின் கூட்டம், தெம்பனிஸ் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள திறந்தவெளியிலும், தெம்பனிஸ் குழுத் தொகுதிக்கான மக்கள் செயல் கட்சியின் கூட்டம் தெமாசெக் தொடக்கக் கல்லூரியிலும் மாலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும்.

