தொகுதி முழுவதும் களப்பணி, மாதாந்தர காலை உணவுகள், செய்திமடல் விற்பனை என, பொதுத் தேர்தல் 2025 முடிந்து ஓராண்டுக்குப் பிறகும், முன்பு கடும் போட்டி நிலவிய தொகுதிகளில் அரசியல்வாதிகள் தொடர்ந்து களப்பணியாற்றி வருவதை வழக்கமாகக் காண முடிகிறது.
பொதுத் தேர்தல் 2025ல் மிகக் கடுமையான போட்டி நிலவிய ஜாலான் காயு தனித்தொகுதி, தெம்பனிஸ் குழுத் தொகுதி, செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி, பொங்கோல் குழுத் தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ சென்றபோது, கடந்த ஓராண்டில் மக்கள் செயல் கட்சியின் (மசெக) வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சியின் தோல்வியுற்ற சில வேட்பாளர்களும் புதிய வழக்கமான சந்திப்புகளை ஏற்படுத்திக்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பேசிய 100 குடியிருப்பாளர்களில் சிலர், இந்தச் சந்திப்புகள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடப்பு நிகழ்வுகள் குறித்த கண்ணோட்டங்களை மேலும் அறிந்துகொள்ளவும், புதிய முகங்களுடன் பழகவும் உதவியதாகக் கூறினர்.
அடுத்த தேர்தலில் இந்த நான்கு வார்டுகளிலும் மீண்டும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்ப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், மசெகவின் முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதிய தொகுதிகளுக்கு மாறிய அதன் சில முக்கியத் தலைவர்களும், தங்கள் புதிய தொகுதி மக்களைச் சந்திப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
தேர்தலுக்குப் பிறகு, 2025 பொதுத் தேர்தலுக்கான மசெகவின் இரண்டு மாற்று வேட்பாளர்களும் தெம்பனிஸ் மற்றும் பொங்கோல் தொகுதிகளில் காணப்பட்டுள்ளனர். முன்னர் நீ சூன் குழுத் தொகுதியில் தன்னார்வலராக சேவையாற்றிய, வழக்கறிஞர் அஹமது ஃபிர்தாவுஸ் தாவூத், தற்போது பொங்கோல் வெஸ்ட் மசெக கிளையின் துணைத் தலைவராக உள்ளார். அதே சமயம், தொழிலதிபர் முஸ்தஃபா கமால் கட்சியின் தெம்பனிஸ் சென்ட்ரல் கிளையில் காணப்படுகிறார். அவர் முன்னர் ஜூ சியாட் தொகுதியில் இருந்தார்.
இதற்கிடையில், பாட்டாளிக் கட்சி போட்டியிட்ட ஜாலான் காயு, தெம்பனிஸ், பொங்கோல் ஆகிய மூன்று தொகுதிகளைப் பொறுத்தவரை, இந்தத் தொடர்ச்சியான களப்பணியை, சிங்கப்பூரின் வடகிழக்கில் தாங்கள் ஏற்கெனவே தக்கவைத்துள்ள மூன்று தொகுதிகளின் அதிக வாக்குகள் பெற்றதற்குப் பங்களித்ததாக அக்கட்சி கூறியுள்ள உத்தியின் நீட்சியாகவே ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.
“ஜாலான் காயு, தெம்பனிஸ் தொகுதிகளைச் சேர்ந்த பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களான திரு ஆண்ட்ரே லோ மற்றும் செல்வி ஐய்லீன் சோங் இருவரும், தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தின் கீழ் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர். இது அவர்களுக்குப் பொதுமக்களின் பார்வையில் அதிக நேரம் இருக்க வாய்ப்பளித்துள்ளது. உண்மையில் வெற்றி பெறாமலேயே, பதவியில் இருப்பவரின் அனுகூலத்தை இவர்கள் இருவரும் நெருங்கிப் பெறுவதற்கு இதுவே சிறந்த வழி என்றும் ஆய்வாளர்கள் கருத்துரைத்தனர்.

