பொதுத் தேர்தல் 2025ல் மக்கள் செயல் கட்சிக்கு 4.33 விழுக்காட்டுப் புள்ளி வாக்குகள் கூடுதலாய்க் கிடைத்ததற்கு இளம் வாக்காளர்கள் தற்போதைய அரசியல் நிலைக்கு ஆதரவளித்தது முக்கியக் காரணமாக இருக்கக்கூடும் என்று கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர், கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய கருத்தாய்வு அவ்வாறு குறிப்பிட்டது.
இணையத்தில் 2,056 சிங்கப்பூர் வாக்காளர்களிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டது.
இவ்வாண்டுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் விகிதம் 65.57 விழுக்காட்டுக்குக் கூடியது. 2020 பொதுத் தேர்தidல் அது 61.24 விழுக்காடாக இருந்தது.
20க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடையே பழைமைவாதப் போக்கு அல்லது தற்போதைய அரசியல் நிலையை ஆதரித்தவர்களின் விகிதம் வெகுவாய் அதிகரித்திருப்பது கருத்தாய்வில் தெரியவந்தது.
கருத்தாய்வில் கலந்துகொண்டோர் மூன்று பகுதியினராகப் பிரிக்கப்பட்டனர். ஐந்து கேள்விகளுக்குப் பதில் தந்ததன் அடிப்படையில் பழைமைவாதிகள், பன்முகத்தன்மையை ஆதரிப்போர், முடிவுகளை நிர்ணயிக்கக்கூடியோர் என்று அவர்கள் வகைப்படுத்தப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் கொள்கைகளைச் சரிபார்ப்பது, விளக்கம் கேட்பதன் அவசியம், மன்றத்தில் மாறுபட்ட கருத்துகளுக்கான தேவை, எதிர்க்கட்சிகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம், தேர்தல் முறை அனைத்துக் கட்சிகளுக்கும் நியாயமாக உள்ளதா? தேர்தல் முறையை மாற்றவேண்டிய அவசியம் இருக்கிறதா? ஆகியவையே அந்த ஐந்து கேள்விகள்.
20க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட பிரிவினரில், பழைமைவாதத்தை ஆதரித்தோரின் விகிதம் இவ்வாண்டுத் தேர்தலில் 28.6 விழுக்காட்டுக்குக் கூடியது. கடந்த தேர்தலில் அது 13.3 விழுக்காடாக இருந்தது. 30க்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டோரிடையே அந்த விகிதம் இம்முறை 25.7 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. போன தேர்தலில் அது 15 விழுக்காடாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதே பிரிவினரில் பன்முகத்தன்மையை ஆதரித்தோரிடையே அந்த விகிதம் சற்றுக் குறைந்தது.
ஒப்புநோக்க 40 வயதை எட்டியவர்களிடையே அரசியல் பன்முகத்தன்மைக்கு ஆதரவு பெருகியிருந்தது. இருப்பினும் ஆதரவு ஆக அதிகம் கூடியது 65 வயதை எட்டிய பிரிவினரிடம்தான். இந்தப் பிரிவினரில் பன்முகத்தன்மை தேவை என்று கருதியோரைவிட அதிகமானவர்கள் பழைமைவாதத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஒட்டுமொத்தத்தில், அரசியல் பன்முகத்தன்மைக்கான ஆதரவு கூடியுள்ளது.
ஆனால் பழைமைவாதத்திற்கு ஆதரவு தெரிவித்த வாக்காளர்கள்கூட தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாறுபட்ட கருத்துகளும் தேவை என்றும் கொள்கைகளைச் சரிபார்ப்பது, விளக்கம் கேட்பது அவசியம் என்றும் நம்புவதாகக் கருத்தாய்வு கூறியது.
தற்போதைய அரசியல் நிலைக்கு இளையர்களிடையே ஆதரவு கூடியதற்கான காரணம் இவ்வாண்டுத் தேர்தலில் வாக்காளர்கள் வாழ்க்கைச் செலவினத்திற்குக் கொடுத்த முக்கியத்துவமாக இருக்கக்கூடும் என்று கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வு வல்லுநர் முனைவர் ஜிலியன் கோ குறிப்பிட்டார்.