வருகின்ற பொதுத் தேர்தலில் தெம்பனிஸ் குழுத் தொகுதி, முக்கிய இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு, மூன்று எதிர்க்கட்சிகள் போட்டியிடுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன.
தற்போது மக்கள் செயல் கட்சி வசமுள்ள அத்தொகுதியில் மூன்று எதிர்க்கட்சிகளும் களமிறங்கினால் நான்குமுனைப் போட்டி ஏற்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களைச் சந்தித்து தங்களை அறிமுகப்படுத்தி வரும் பாட்டாளிக் கட்சி, அங்கு போட்டியிட விரும்புவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன.
கடந்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் ஐந்து உறுப்பினர் குழுத் தொகுதியில் போட்டியிட்டு வரும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும் தெம்பனிஸ் தொகுதியை குறி வைத்துள்ளது. ஜனவரி 6, 9ஆம் தேதிகளில் தெம்பனிஸ் குடியிருப்பாளர்களை அக்கட்சிச் சந்தித்து உரையாடியது. கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அங்கு களப்பணி ஆற்றி வருவதாகவும் தற்போது அது தீவிரமடைந்துள்ளதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி கூறியுள்ளது.
இந்த இரண்டு எதிர்க்கட்சிகளுக்கு இடையே மக்கள் சக்தி கட்சியும் தெம்பனிசில் தேர்தல் களம் காணும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் தலைமைச் செயலாளரான கோ மெங் செங், பிப்ரவரி 23ஆம் தேதி தெம்பனிஸ் ஸ்ட்ரிட் 81ல் மேற்கொண்ட பயணத்தின்போது, தங்களுடைய குழுவை தெம்பனிசில் நிறுத்த விருப்பம் தெரிவித்திருந்தார்.
இங்கு, வெற்றி பெறுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
பிப்ரவரி 22ஆம் தேதி மக்கள் குரல் கட்சியின் தலைவரான லிம் தியன் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து மக்கள் சக்திக் கட்சி விலகுவதாக அறிவித்த சில மணி நேரங்களில் அவர் தெம்பனிசில் போட்டியிடும் விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தேர்தலில் போட்டியிடும் உத்திகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மக்கள் சக்திக் கட்சி கூட்டணியிலிருந்து விலகியதாக நம்பப்படுகிறது.
மக்கள் சக்திக் கட்சி, மக்கள் குரல், ஜனநாயக முற்போக்குக் கட்சி, சீர்திருத்தக் கட்சி ஆகியவை சீர்திருத்தத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கியிருந்தன.
தெம்பனிசில் பாட்டாளிக் கட்சி புதிய நான்கு முகங்களை களத்தில் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுயதொழில் செய்பவரான ஜிம்மி டான், 53, பணம் பட்டுவாடா நிபுணர் ஜெஸ்பர் குவான், வழக்கறிஞராக இருந்து ஆலோசகராக மாறிய ஆண்ட்ரி லோ, 33, நிதி சேவைத் தொழில் துறையின் இணை இயக்குரான திருவாட்டி அஃபிஃபா காலித் ஆகியோர் அவர்கள்.
கடந்த ஏப்ரல், நவம்பரில் பாட்டாளிக் கட்சி, மக்களை எட்டுவதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது இரண்டு சந்தர்ப்பங்களில் அந்நால்வரும் முன்னாள் கட்சித் தலைவர் லோ தியா கியாங்குடன் குழுப் படம் எடுத்துக் கொண்டனர்.
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரான மசகோஸ் ஸுல்கிஃப்லி தலைமையிலான மக்கள் செயல் கட்சி குழுவினர், ரெனோ ஃபோங் தலைமையிலான தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டு 66.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.
ஆனால் 2023ஆம் ஆண்டிலிருந்து மக்கள் செயல் கட்சி, ஒரு உறுப்பினர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. முன்னாள் சபாநாயகர் டான் சுவான் ஜின் உடனான ரகசிய உறவால் செங் லி ஹுய் பதவி விலகியதே அதற்கு காரணம்.