பொதுத் தேர்தல் வாக்குச்சீட்டுகள் நவம்பர் 22ஆம் தேதி அழிக்கப்படும்

1 mins read
8d06ec97-9512-4696-8bc7-590af61a52b0
வாக்காளர்களின் ரகசியத்தைக் காப்பதற்காக வாக்குச் சீட்டுகள் அழிக்கப்படுகின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் தேர்தலுக்குப் பிறகு வாக்குச் சீட்டுகளை அழிப்பது வழக்கமான நடைமுறையாகும்.

அந்த வகையில் இவ்வாண்டின் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுகள், ஆவணங்கள் நவம்பர் 22ஆம் தேதி அழிக்கப்படும் என்று திங்கட்கிழமை (நவம்பர் 10) தேர்தல் துறை தெரிவித்தது.

இந்த நடவடிக்கை, நாடாளுமன்றச் சட்டம் 1954க்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது வாக்குச் சீட்டுகளும் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இதர ஆவணங்களும் உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் துவாஸ் சவுத் எரியூட்டும் ஆலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படும்.

சட்டப்படி இவற்றை ஆறு மாத காலத்திற்கு பாதுகாப்பாக வைத்திருக்கலாம். ஆனால் அதன் பிறகு அதிபர் ஆணை பிறப்பித்தால் தவிர அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்.

வாக்காளர்களின் ரகசியத்தை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று தேர்தல் துறை குறிப்பிட்டது.

வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் வாக்குச்சீட்டுகள் அழிக்கப்படுவதை நேரில் காண அழைக்கப்படுவார்கள் என்று அது மேலும் கூறியது.

கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது தீவு முழுவதும் அமைக்கப்பட்ட 1,240 வாக்குச் சாவடிகளில் 2.4 மில்லியனுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் வாக்களித்தனர்.

மக்கள் செயல் கட்சி 65.57 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 97 நாடாளுமன்ற இடங்களில் 87ல் அது வெற்றி பெற்றது. பாட்டாளிக் கட்சி 10 இடங்களைத் தக்க வைத்துக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்