முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ் ஜோஷுவா தாமஸ் தேர்தலில் போட்டியிடவில்லை

2 mins read
cd6ba833-a19b-44be-807e-ebd787a44906
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ் ஜோஷுவா தாமஸ். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ராஜ் ஜோஷுவா தாமஸ், வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தமது நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய அவர், மக்கள் செயல் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார்.

தமது பதவியைவிட்டு விலகியதிலிருந்து பலதரப்பட்ட கருத்துகள் வருவதாகவும் எல்லாவற்றுடனும் தமக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அவற்றில் பல நியாயமானவை என்பதை தாம் ஒப்புக்கொள்வதாகவும் திரு தாமஸ் கூறினார்.

‘லிங்க்டுஇன்’, ‘ஃபேஸ்புக்’ ஆகிய சமூக ஊடகங்களில் அக்கருத்தை அவர் பதிவிட்டார்.

மேலும், “வரும் பொதுத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. அதற்குப் பதிலாக நான் தேர்தல் களத்தில் நேரத்தைச் செலவிட்டு வருகிறேன். எமது வெற்றிக்கான முதல் படியை அதிலிருந்து நான் தொடங்க விரும்புகிறேன்,” என அவர் தெரிவித்தார்.

தம்மைத் தொடர்புகொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் திரு தாமஸ் சொன்னார்.

“என்மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநிறுத்தவும் அதை மேலும் வலுப்படுத்தவும் என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்,” என அவர் தமது பதிவில் குறிப்பிட்டார்.

திரு தாமஸ், மனநல மருத்துவரான டாக்டர் சையத் ஹாரூன் அல்ஹப்ஷி ஆகிய இருவரும் தங்களது நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பிப்ரவரி 14ஆம் தேதி விலகினர்.

சிங்கப்பூர் அரசியல் வரலாற்றிலேயே நியமன நாடாளுமன்ற உறுப்பினர் தமது பதவிக் காலம் முடிவதற்குள் அதிலிருந்து விலகியது இதுவே முதல்முறை.

ஓர் அரசியல் கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வதற்காக அவர்கள் முன்னெடுத்ததாகக் கூறப்பட்ட அந்த நகர்வு குறித்து பல முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் விமர்சித்தனர்.

இந்நிலையில், அரசியல் உத்திகளைக் கற்றுக்கொள்ள தேர்தல் களத்தில் அதிக நேரம் செலவிடுவேன் என்றும் தேர்தல் முடிந்ததும் தமது திட்டங்களைப் பற்றி மேலும் கூறத் தயாராக இருப்பேன் என்றும் திரு தாமஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்