பொதுத் தேர்தலில் போட்டியிட எண்ணம் உள்ளது: டான் செங் போக்

2 mins read
7ffcbd44-cbb2-4284-acac-a54031671fc7
கிளமெண்டி சென்ட்ரலில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) தொகுதி உலா சென்ற சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டான் செங் போக் (இடமிருந்து இரண்டாவது), அங்கு குடியிருப்பாளர்களைச் சந்தித்துப் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் நிறுவனரும் அதன் தலைவருமான டான் செங் போக், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தாம் எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கிளமெண்டியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) தொகுதி உலா சென்ற அவரிடம், “தேர்தலில் நிற்கப் போகிறீரா?” எனச் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அவர், “என்னால் முடியும்வரை, அரசியல் சூழலுக்கு ஏற்புடையவராக இருக்கும்வரை, நான் அரசியலில் இருப்பேன்,” என்றார்.

தேர்தலுக்கு முன்னர் வேட்புமனு நிலையத்திற்குச் செல்வாரா எனக் கேட்டதற்கு, தாம் வேட்பாளராவதை உறுதிப்படுத்தாவிட்டாலும், “அதுவே இயல்பான நடைமுறை, அல்லவா?” என்றார் டாக்டர் டான்.

“அரசியலுக்கு நான் ஏற்புடையவராக இருக்கும்வரை, மக்களுக்காக குரல்கொடுப்போர் தேவைப்படும்வரை, நாட்டிற்கு என்னால் பங்களிக்க முடியும்வரை, என்னால் அக்கடமையைத் தட்டிக்கழிக்க முடியாது,” என்று அவர் சொன்னார்.

தேர்தலுக்கு முன்னர் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் எல்லைகள் மாற்றியமைக்கப்படும் என்பதை தமது கட்சி எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட டாக்டர் டான், எது எப்படி இருந்தாலும் தமது கட்சி அத்தொகுதியில் போட்டியிடும் என்றார்.

“அரசியல்வாதியாக இருந்தால் போட்டி கொடுக்க வேண்டும். நான் சாக்குப்போக்கு சொல்லவில்லை. வெஸ்ட் கோஸ்ட் தொகுதி எல்லை எப்படி மாறினாலும் சரி, நாங்கள் அங்கு இருப்போம்,” என்று அவர் எடுத்துரைத்தார்.

ஜூரோங் குழுத்தொகுதியில் உள்ள கிளமெண்டியில் கட்சி தொகுதி உலா மேற்கொண்டதற்கான காரணம் குறித்து டாக்டர் டானிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், வெஸ்ட் கோஸ்ட் குடியிருப்பாளர்களின் யோசனைகள் மட்டுமன்றி மற்ற சிங்கப்பூரர்களும் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிய கட்சி விரும்புவதாக அவர் சொன்னார்.

அவரது உடல்நிலை குறித்துக் கேட்டதற்கு, “என்னைப் பாருங்கள். உங்களிடம் என்னால் இன்னும் பேச முடிகிறது. என்னால் கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்க முடிகிறது. ஒவ்வோர் ஆண்டும் நான் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்கிறேன். என் கடைசிப் பரிசோதனை முடிவுகள் நல்லபடியாக இருந்தன,” என்று அவர் பதிலுரைத்தார்.

ஏப்ரலில் 85 வயதை எட்டும் டாக்டர் டான், 2020 தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் கட்சிக் குழுவை வழிநடத்தினார்.

அத்தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில்தான் ஆகக் கடுமையான போட்டி நிலவியது. சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 48.31 விழுக்காட்டு வாக்குகளையும் மக்கள் செயல் கட்சி 51.69 விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றன. வரும் தேர்தலிலும் அங்கு கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்