தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுத் தேர்தல் முடிவுகள் மசெக மீதான வாக்காளர்களின் நம்பிக்கையைக் காட்டுகின்றன: ஆய்வாளர்கள்

3 mins read
நிச்சயமற்ற சூழலைக் கடந்துவர மசெக சிங்கப்பூரை வழிநடத்தும் என்று நம்புவதாகக் கருத்து
2351d4eb-7a95-4d6b-813d-d786da040678
மக்கள் செயல் கட்சி 65.57 விழுக்காட்டு வாக்குகளுடன் மொத்தமுள்ள 97 நாடாளுமன்ற இடங்களில் 87ஐக் கைப்பற்றியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் தேர்தல் 2025ல் மக்கள் செயல் கட்சி (மசெக) பெற்றுள்ள வலுவான வெற்றி, சிங்கப்பூர் கொந்தளிப்பான உலகச் சூழலைக் கடந்துவர வழிநடத்தும் திறன் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கும் அவரது கட்சிக்கும் இருப்பதாக வாக்காளர்கள் நம்புவதைக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்தப் பொதுத் தேர்தலில் 65.57 விழுக்காட்டு வாக்குகளுடன் மகத்தான வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 97 இடங்களில் 87ஐ மசெக கைப்பற்றியுள்ளது.

கொவிட்-19 கிருமிப் பரவல் நெருக்கடியைக் கையாண்ட விதம் உட்படக் கடந்த ஐந்தாண்டுகளில் அரசாங்கத்தின் சாதனைகளுக்கான அங்கீகாரம் இது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

“மக்கள் செயல் கட்சியில் தலைமைத்துவ மாற்றம் நடந்த பிறகான பொதுத் தேர்தல் என்பதால் இது மிக முக்கியமான தேர்தல்,” என்று குறிப்பிட்ட மசெக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தர்ஜித் சிங், சிங்கப்பூரை எதிர்காலத்திற்கு வழிநடத்தப் புதிய பிரதமருக்கும் நான்காம் தலைமுறை மசெக குழுவினருக்கும் வாக்காளர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

அரசியல் பன்மைத்துவம் தேவை என்ற கருத்து வாக்காளர்களிடையே நிலவினாலும் சில எதிர்க்கட்சிகள் வாக்காளர்களுக்குப் பொருத்தமானவையாகத் திகழ்வதில் திணறுவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக வல்லுநர்கள் கூறினர்.

சிங்கப்பூரின் முக்கிய எதிர்க்கட்சி என்ற தனது நிலையைப் பாட்டாளிக் கட்சி வலுப்படுத்தியுள்ளது.

அல்ஜுனிட், செங்காங் குழுத்தொகுதிகளிலும் ஹவ்காங் தனித்தொகுதியிலுமாக 10 இடங்களைத் தக்கவைத்துக் கொண்டதுடன் அக்கட்சியிலிருந்து இருவர் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் செயல்படவிருக்கின்றனர்.

தெம்பனிஸ் குழுத்தொகுதியிலும், ஜாலான் காயு தனித்தொகுதியிலும் பாட்டாளிக் கட்சி தோல்வியுற்றாலும் அதன் வேட்பாளர்களுக்கு வாக்காளகளிடையே நல்லாதரவு இருப்பது அதற்குக் காரணம்.

இவ்வேளையில், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (எஸ்டிபி), சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைவிட (பிஎஸ்பி) இந்தத் தேர்தலில் வாக்காளர்களிடம் சிறப்பான ஆதரவைப் பெற்றுள்ளது.

சிறிய கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. வாக்கு வித்தியாசம் மிக அதிகமாக உள்ள நிலையில் வேட்பாளர்கள் சிலர் வைப்புத்தொகையை இழக்க நேரிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இரு கட்சிகள் மட்டுமே இடம்பெறவிருக்கின்றன.

பிரதமர் என்ற முறையிலும் மசெகவின் புதிய தலைமைச் செயலாளர் என்ற முறையிலும் திரு லாரன்ஸ் வோங்கிற்கு சிறப்பான ஆதரவு இருப்பதை இது காட்டுவதாகக் கொள்கை ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் கில்லியன் கோ கூறினார்.

அவருக்குமுன் பிரதமராக இருந்தவர்கள் அவரவர் முதல் தேர்தல் பிரசாரத்தில் கூடுதல் சவால்களை எதிர்கொண்டதாக டாக்டர் கோ குறிப்பிட்டார்.

பிரதமராகத் திரு கோ சோக் டோங் 1991ல் முதல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டபோது, மசெக நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் எதிர்க்கட்சியிடம் தோல்வியுற்றது. திரு லீ சியன் லூங் பிரதமராக 2006ல் முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது வாக்காளர்களிடம் மசெகவிற்கான ஆதரவு 8.7 விழுக்காடு சரிந்தது என்பதை டாக்டர் கோ சுட்டினார்.

இந்தப் பொதுத் தேர்தலில், வாழ்க்கைச் செலவினம், உலகளாவிய நிச்சயமற்றதன்மை ஆகியவை குறித்த கவலைகள், அமைச்சுகளும் அவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்களும் தொடர்ந்து சிங்கப்பூருக்காக உழைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வாக்காளர்களிடையே விதைத்திருக்கக்கூடும். அது அவர்களின் வாக்களிப்பில் பிரதிபலித்திருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கொவிட்-19 நெருக்கடியைக் கையாண்ட விதம், கடந்த ஐந்து ஆண்டுகளில் மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணி போன்றவையும் இந்த வெற்றிக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்பது அவர்கள் கருத்து.

குறிப்புச் சொற்கள்