புக்கிட் பாஞ்சாங் தொகுதியைத் தற்காக்கும் வாய்ப்பு தனக்கு அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் அத்தொகுதியின் உறுப்பினர் லியாங் எங் ஹுவா உள்ளார்.
தமக்கு எதிராகச் சென்ற முறை நடந்த பொதுத் தேர்தலில் கடுமையான போட்டி தந்த பேராசிரியர் தம்பையா இம்முறையும் தமக்கு எதிராகக் கடும் போட்டி தருவார் என்று தான் நம்புவதாகத் திரு லியாங் கூறினார்.
“நான் அந்தத் தொகுதியில் போட்டியிடத் தயாராக உள்ளேன். மீண்டும் அந்தத் தொகுதியைப் பிரதிநிதிக்கும் வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறேன். ஆகையால், அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்,” என்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தபோது தெரிவித்தார்.
நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவர், கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சித் தலைவர் பால் தம்பையாவை எதிர்த்துப் போட்டியிட்டு 53.73 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வாகை சூடினார் என்பது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், 33,566 வாக்காளர்களைக் கொண்ட ஆகப் பெரிய தனித் தொகுதியான புக்கிட் பாஞ்சாங்கில் தனது கட்சி வேட்பாளராகப் பேராசிரியர் பால் தம்பையா விளங்குவார் என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) வழங்கிய சிறப்பு நேர்காணலில் திரு லியாங் பேராசிரியர் தம்பையாவை கடுமையான போட்டியைத் தரக்கூடியவர் என்று வருணித்தார்.
“அவர் (பேராசிரியர் தம்பையா) தான் போட்டியில் வெல்வது சிரமம் என்ற தோற்றத்தைத் தர விரும்புகிறார். ஆனால், நான் அவ்வாறு நினைக்கவில்லை. என்னைப்போலவே இந்தத் தனித் தொகுதியில் அவருக்கும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம். நான் முடிந்த மட்டும் சிறப்பாகச் செயல்படுவேன்,” என்று திரு லியாங் விளக்கினார்.
தொடர்ந்து பேசிய திரு லியங், “என்னால் அவரைவிட சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்புகிறேன். பெரிய திட்டங்களோ, சிறிய திட்டங்களையோ அவற்றை நான் திறம்படச் செய்து காட்டி உள்ளேன். நான் புக்கிட் பாஞ்சாங் தொகுதியை நன்கு அறிவேன். இதை நான் தன்னடக்கத்துடனேயே கூறுகிறேன்,” என்றார் திரு லியாங் எங் ஹுவா.