பொதுத் தேர்தல்: அங் மோ கியோவில் லீ சியன் லூங்குடன் புதுமுகங்கள் இருவர்

2 mins read
df3508b0-9ad6-42a6-a9a6-aa8c2ec9b4a5
அங் மோ கியோ குழுத்தொகுதியில் திருவாட்டி ஜாஸ்மின் லாவ், திரு விக்டர் லாய் இருவரும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்குடன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13ஆம் தேதி) தொகுதி உலா சென்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அங் மோ கியோ குழுத்தொகுதியில் முன்னாள் மூத்த பொதுத் துறை ஊழியர் ஜாஸ்மின் லாவ், நீண்டநாள் மக்கள் செயல் கட்சி உறுப்பினர் விக்டர் லாய் ஆகிய புதுமுகங்கள் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்குடன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13ஆம் தேதி) தொகுதி உலா செல்வதைக் காண முடிந்தது.

நாற்பத்திரண்டு வயதான திருவாட்டி லாவ், முன்னர் சுகாதார அமைச்சில் துணைச் செயலாளராக அந்தத் துறையின் மனிதவளம், நிதி ஒதுக்கீடு, ஒழுங்குப்படுத்தல் நடிவடிக்கைகள் போன்றவற்றை மேற்பார்வையிடும் பணியில் இருந்தார்.

இவர் எதிர்வரும் 2025 பொதுத் தேர்தலில் மசெக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்படவுள்ள, பிரதமர் லாரன்ஸ் வோங் சனிக்கிழமை (ஏப்ரல் 12ஆம் தேதி) அறிமுகப்படுத்திய எட்டு புதுமுகங்களில் இவரும் ஒருவர்.

இவருடன் தொகுதி உலாவில் பங்கேற்ற திரு விக்டர் லாய், கடந்த 2020 பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சியிடம் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் தோற்ற மக்கள் செயல் கட்சிக் குழுவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், மசெக பிடோக்-பொங்கோல் கிளையின் தலைவராக 13 ஆண்டுகளில் பணிபுரிந்துவிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தலைமைப் பொறுப்பை துணைத் தலைவர் டாக்டர் ஏட்ரியன் ஆங் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு அப்பொறுப்பிலிருந்து விலகினார்.

இது குறித்து தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்த திரு லாய், “இங்கு எனது பணி முடிவுக்கு வருகிறது. எனினும், நான் வருங்காலத்தில் அனைவரும் சிறப்புமிகு சிங்கப்பூரைக் காணும் சிந்தனையில் புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

அங் மோ கியோ குழுத்தொகுதி மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இங் லிங் லிங், கான் தியாம் போ, டேரில் டேவிட், நடியா சாம்டின் ஆகியோரைக் கொண்டுள்ளது. 

குறிப்புச் சொற்கள்