வரும் மே மாதம் 3ஆம் தேதி பொதுத் தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தினமாகும். அதன் பிறகு, ஒன்பது நாள்களுக்குப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும். மே 2ஆம் தேதி பிரசார ஓய்வு நாள். மே 3 காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிப்பு நடைபெறும்.
இக்காலகட்டத்தில் சிங்கப்பூரில் உள்ள பல்லின, பல சமய மக்களிடையே உள்ள ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வண்ணம் இணையம்வழி தகவல்களைப் பரப்பவோ, கருத்துகளைப் பதிவு செய்யவோ, தொல்லை விளைவிக்கவோ கூடாது என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இணையம் மூலம் பொறுப்பற்ற நடத்தை, குற்றச் செயலாக எடுத்துக்கொள்ளப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் தேர்தலைப் பாதிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் காவல்துறையும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் புதன்கிழமை (ஏப்ரல் 16) கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இணையம்வழி கலந்துரையாடல்களில் ஈடுபட சிங்கப்பூரர்களுக்கு உரிமை உள்ளபோதிலும் அதை அவர்கள் பொறுப்புடன் செய்ய வேண்டும் என்று காவல்துறையும் அமைச்சும் நினைவூட்டின.
வாக்களிப்பு நாள் நெருங்கி வரும் நிலையில், இணையம்வழி பொய்ச் செய்திகள் பரவும் அபாயம் இருப்பதை அதிகாரிகள் சுட்டினர்.
வன்போலி (deepfake) போன்ற தொழில்நுட்பம் மூலம் போலிக் காணொளிகளை எளிதில் உருவாக்கி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய போலித் தகவல்கள் பொதுமக்களை ஏமாற்றி தேர்தலின் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இணையம் மூலம் பொய்ச் செய்திகளைப் பரப்பவோருக்கு எதிராகப் பல்வேறு சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில வாரங்களில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், நாட்டுக்கு மிக முக்கியமான இக்காலகட்டத்தில் இணையத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துமாறு அனைத்துச் சிங்கப்பூரர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.