வாடிக்கையாளர்களுடனான ஈடுபாட்டையும் பரிந்துரைகளை வழங்கும் முறையையும் மேம்படுத்தும் நோக்கில், ‘உருவாக்க செயற்கை நுண்ணறிவு’ தொழில்நுட்பத்திலான பயிற்சித் திட்டத்தை ஓசிபிசி வங்கி அறிமுகப்படுத்துகிறது. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற, நன்கு விவரமறிந்த நிதி ஆலோசனைகளைப் பெற முடியும் என எதிர்பார்க்கலாம்.
ஏப்ரல் 15ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்த ஆறு மாத காலப் பயிற்சித் திட்டம், சிங்கப்பூரில் உள்ள வங்கியின் 900 சொத்து ஆலோசகர்களுக்கு வழங்கப்படும்.
12 மாதங்களாக உருவாக்கப்பட்ட இத்திட்டம், ஓசிபிசியின் பெயர் குறிப்பிடாத வாடிக்கையாளர் தரவுகளால் வழிநடத்தப்படும் பெரும் மொழி மாதிரிகளைக் கொண்ட உருவாக்கச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.
இதன் மூலம், வாடிக்கையாளர்களுடனான உரையாடல்களை எதார்த்தமான முறையில் உருவகப்படுத்தி, முதலீட்டுக் கட்டமைப்புகளை உருவாக்குதல், அபாயங்களை மதிப்பிடுதல் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளை நிர்வகித்தல் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் ஆலோசகர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதலீட்டு ஆலோசனை, வாடிக்கையாளர் நிர்வாகம், தயாரிப்புகள் குறித்த முழுமையான ஆற்றல் மற்றும் சொத்துத் திட்டமிடல் போன்ற பல்வேறு அம்சங்களை இந்தப் பயிற்சி உள்ளடக்கியுள்ளது. இதனால், அடிப்படையான திட்டமிடல் முதல் சிக்கலான முதலீட்டு முடிவுகள் வரை வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட கேள்விகளைக் கையாள ஆலோசகர்கள் சிறப்பாகத் தயாராகியிருப்பார்கள் என வங்கி தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வெவ்வேறு வாழ்க்கை நிலைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப நிதிப் பரிந்துரைகளை வழங்குவது உட்பட, ஆலோசகர்கள் வாடிக்கையாளர்களுடன் ஈடுபடும் விதத்தை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழில்நுட்ப ஆற்றல் மற்றும் தகவல் தொடர்புத் திறன்கள் ஆகிய இரண்டிற்கும் இப்பயிற்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆலோசகர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் மற்றும் மதிப்பிடப்படும் முறையை இந்தத் திட்டம் தரப்படுத்துவதால், வாடிக்கையாளர்கள் மிகவும் நிலையான மற்றும் உயர்தரமான ஈடுபாட்டைப் பெற முடியும்.
இதற்கு முன்பு, சொத்து ஆலோசகர்கள் மேற்பார்வையாளர்களுடனான நேரடி, தனிப்பட்ட அமர்வுகள் மூலம் பயிற்சி பெற்றனர். இது அந்த மேற்பார்வையாளர்களின் நேர இருப்பைப் பொறுத்து அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு மேற்பார்வையாளரும் வழக்கமாக 10 ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதால், ஓர் ஆலோசகர் பயிற்சி அமர்வைப் பெறுவதற்கு மூன்று வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போதைய உருவாக்கச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் இந்தத் தாமதங்கள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

