‘மரபணுப் பரிசோதனை ஒரு தனிப்பட்ட முடிவு’: அரிய நோய் பாதிப்பு ஆபத்தைக் கண்டறியும் முயற்சி

‘மரபணுப் பரிசோதனை ஒரு தனிப்பட்ட முடிவு’: அரிய நோய் பாதிப்பு ஆபத்தைக் கண்டறியும் முயற்சி

2 mins read
உலகளவில் 7,000க்கும் மேற்பட்ட அரிய நோய்கள் பாதிக் குழந்தைகளை பாதிக்கின்றன. சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் பிறக்கும் 100 குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு அரிய உடல் கோளாறு அல்லது பிறப்பில் குறைபாடு உள்ளது.
7d28c0af-5a37-411b-9263-4cc2fac14d85
சிங்கப்பூரில், ஒவ்வோர் ஆண்டும் பிறக்கும் 100 குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு அரிய உடல் கோளாறு அல்லது பிறப்பில் குறைபாடு உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கேகே மகளிர், சிறார் மருத்துவமனை (கேகேஎச்), தெமாசெக் அறக்கட்டளையுடன் இணைந்து தெமாசெக் அறக்கட்டளை ‘பிரடிக்ட்’ (PREDICT) எனும் தம்பதியருக்கான மரபணுப் பரிசோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, கருத்தரித்திருக்கும் அல்லது கருத்தரிக்க விரும்பும் சிங்கப்பூர் தம்பதிகளுக்கு மேம்படுத்தப்பட்ட பரிசோதனைத் திட்டமாகும். 

இந்தப் பரிசோதனை, ஆரோக்கியமாக இருப்பவர்கள் தங்களுக்கும் தங்கள் துணைக்கும் பிறக்கும் குழந்தை, மரபணுப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்பதைக் கண்டறிய முற்படும். 

இந்த முயற்சியைப் பெரிதும் பாராட்டிய தொழிலதிபர் லாவண்யா ரோசி, 39, வருங்காலத்தில் தம் கணவருடன் இந்தப் பரிசோதனையை செய்துகொள்ளப் போவதாகச் சொன்னார். தற்போது இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான லாவண்யா, ஆரோக்கியத்தில் மரபியல் பெரும்பங்கு வகிப்பதாகக் கூறினார்.

“நாம் ஆரோக்கிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தாலும், எளிதில் கண்டறிய முடியாத நோய்களை இதுபோன்ற பரிசோதனைகள் வெளிக்காட்டும்,” என்றார் லாவண்யா. 

‘பயோஹேக்கிங்’ (biohacking) வழிமுறையை ஊக்குவிக்கும் அவர், மரபணுப் பரிசோதனையை எல்லா பெற்றோரும் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். 

“அப்பரிசோதனை மூலம், மரபணுக்களில் உள்ள நோய்களைப் பற்றியும் அவற்றைச் சமாளிக்கும் வழிகளைப் பற்றியும் தெளிவு கிடைக்கும்,” என்றார் அவர்.

குழந்தைகளுக்குத் திட்டமிடும் தம்பதியருக்கு இந்தப் பரிசோதனை முக்கியம் என்றார் ஆசிரியர் சரவணன் குமரன், 30. அண்மையில் திருமணமான தமக்குக் குழந்தை பிறக்கும்போது, உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளைக் கண்டறிந்து, இந்தப் பரிசோதனை மூலம் மருத்துவ முடிவுகளை எடுக்க முடியும் என்று அவர் கூறினார். 

“பிறகு வருந்துவதைவிட இப்போதே பாதுகாப்பாக இருப்பது சிறந்தது,” என்றார் அவர்.  

இருப்பினும், மரபணுப் பரிசோதனை மூலம், பிறக்கும் குழந்தைக்கு நோய் இருப்பது தெரிய வந்தால் அது பெற்றோரை மனரீதியாக பாதிக்கும் என்றார் சந்தியா முருகானந்தன், 39. 

“இப்பரிசோதனை மூலம், மரபியல் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகம் எனத் தெரியவந்தால், குழந்தை பெற்றுக்கொள்வது கேள்விக்குறியாகும்,” என்றார் அவர். 

குறிப்பாக, அந்நோய் தன் குழந்தையின் ஆயுட்காலத்தைப் பாதிக்கும் என்றால், அதிலிருந்து மீள்வது கடினம் என்றும் அவர் கூறினார்.

மரபணுப் பரிசோதனை ஒவ்வொரு தம்பதிக்கும் தனிப்பட்டதாக இருக்கும் என்றார் கேகேஎச்சின் மரபியல் சேவையின் மூத்த ஆலோசகரான இணைப் பேராசிரியர் சௌமியா சேகர் ஜமுவார். 

“இந்த முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், தங்களுக்கும் தங்கள் குழந்தைகளின் நலனுக்காகவும் சிறந்த முடிவுகளை எடுக்க பெற்றோரை நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என்றார் இணைப் பேராசிரியர் சௌமியா. 

அடுத்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40,000 தம்பதிகள் இப்பரிசோதனையை இலவசமாகச் செய்துகொள்வர். இத்திட்டம் 2027 வரை கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் தகுதியுள்ள தம்பதியர்க்குக் கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்