எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் திரு ஜார்ஜ் கோ அதற்கான தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளார்.
63 வயதான அவர் வெள்ளிக்கிழமை காலை தன் துணைவியார் திருவாட்டி லிசா சுமாலியுடனும் நான்கு பிள்ளைகளுடனும் தேர்தல் துறை அலுவலகத்திற்குச் சென்றார்.
ஏறக்குறைய 50 ஆதரவாளர்களையும் அங்கு காணமுடிந்தது. அவர்களில் பெரும்பாலோர் செந்நிற ஆடையில் இருந்தனர்.
விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர் திரு கோ ஊடகங்களிடம் பேசினார்.
“மூன்று தொகுப்புகள் அடங்கிய இந்தப் கோப்பைப் பாருங்கள். நான் பல்லாண்டுகளாகச் சேகரித்துவைத்த ஆவணங்கள் இவை,” என்றார் அவர்.
அந்த ஆவணங்கள் தமது கடின உழைப்பைப் பிரதிபலிப்பதாகக் கூறிய திரு கோ, மனத்தளவில் அவை தமக்கு மிக முக்கியமானவை என்று விளக்கியபோது சற்று உணர்ச்சிவசப்பட்டார்.
இந்நிலையில், மற்ற உத்தேச வேட்பாளர்களும் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
வியாழக்கிழமை இரவு, அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இங் கோக் சோங், 75, தாம் விண்ணப்பப் படிவங்களை புதன்கிழமையன்று சமர்ப்பித்ததாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளர் டான் கின் லியன் எதிர்வரும் தேர்தலுக்குத் தேவைப்படும் தகுதிச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருப்பதாகக் கூறினார். ஆனால், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார் அவர்.
அதிபர் தேர்தல் குழு தகுதிபெறும் வேட்பாளர்களை உறுதிசெய்த பிறகே, வேட்புமனுத் தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்கப்போவதாக 75 வயதான திரு டான் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66, ‘ஒவ்வொருவருக்கும் மரியாதை’ என்ற கருப்பொருளுடன் அதிபராவதற்கான தமது முயற்சியை அதிகாரபூர்வமாகத் தொடங்கினார்.