சிங்கப்பூரில் தடுப்பூசி ஆலையை மூடவிருக்கும் ஜெர்மானிய நிறுவனம்

சிங்கப்பூரில் தடுப்பூசி ஆலையை மூடவிருக்கும் ஜெர்மானிய நிறுவனம்

ஊழியர்களுக்கு உதவ பொருளியல் வளர்ச்சிக் கழகம் பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றவுள்ளது
1 of 2
படம்: பாயோஎன்டெக் நிறுவனம்
படம்: சிஎன்ஏ ஊடகம்

03 Apr 2026 - 7:24 pm

2 mins read

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிங்கப்பூரின் துவாஸ் பகுதியில் இயங்கும் தடுப்பூசி ஆலையை மூடவிருப்பதாக ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனம் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்துள்ளது.

அந்த ஆலையில் தற்போது 85 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். முழுமையான ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டது.

சில ஆண்டுகளாகவே அந்நிறுவனம் வருமானத்தில் நஷ்டம் அடைந்துள்ளது. இவ்வாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட தகவலின்படி, கடந்த 2025ஆம் ஆண்டில் நிறுவனத்துக்கு S$1.68 பில்லியன் (US$1.31 பில்லியன்) வருமான இழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டில் நிறுவனத்தின் இழப்பு S$ 987 மில்லியனாக (US$ 786 மில்லியன்) இருந்தது.

“எங்கள் மருத்துவ செயல்திறனுடன் நீண்டகால இலக்குகளை ஒருங்கிணைக்க சிங்கப்பூரில் உள்ள ஆலையை 2027ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் மூடுவதற்கான உத்திபூர்வ முடிவை நிறுவனம் எடுத்துள்ளது,” என்று கொவிட் பெருந்தொற்றுக்கான தடுப்பூசித் தயாரிப்பாளரான பயோஎன்டெக் நிறுவனம் சிஎன்ஏ ஊடகத்திடம் தெரிவித்தது.

ஊழியர்கள் வழங்கிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை உணர்ந்து, மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் அவர்களுக்கு துணைநின்று ஆதரவு வழங்க கடப்பாடு கொண்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

நிறுவனத்தின் ஊழியர்களுக்கு உதவியும் மாற்று வேலைகளையும் வழங்க பொருளியல் வளர்ச்சிக் கழகம், சிங்கப்பூர் ஊழியரணி, என்டியுசியின் வேலை நியமன, வேலைத் தகுதிக் கழகம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட கொவிட் 19 ‘பைஸர்-பயோஎன்டெக் ’ வகை தடுப்பூசிகளை பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்தது. அதன் துவாஸ் ஆலையை கடந்த 2021ஆம் ஆண்டில் அது திறந்தது.

குறிப்புச் சொற்கள்