கேலாங் ஈஸ்ட் பொது நூலகத்திற்கு வருகை தரும் மக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் நூலகத்தை மறுசீரமைப்பு செய்யும் தொகை அதிகமாக இருந்ததாலும் அது இடமாற்றம் செய்யப்படுகிறது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்துள்ளார்.
இதை அவர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கேலாங் ஈஸ்ட் பொது நூலகத்திற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை 31 விழுக்காடு சரிந்துள்ளது என்றார் அவர்.
2015ஆம் ஆண்டு நூலகத்திற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை 670,000ஆக இருந்தது. 2024ஆம் ஆண்டு அது 470,000க்கு குறைந்தது.
மேலும் நூலகத்திற்கான மறுசீரமைப்புப் பணிக்கான தொகை 22 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இத்தகைய காரணங்களால் தஞ்சோங் காத்தோங் கடைத்தொகுதிக்கு அந்த நூலகம் இடமாறுகிறது என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார் துணை அமைச்சர் மஹ்ஸாம்.
தற்போது தஞ்சோங் காத்தோங் கடைத்தொகுதியில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
2030ஆம் ஆண்டு அந்த நூலகம் தஞ்சோங் காத்தோங் கடைத்தொகுதிக்கு இடமாறும்.