உலகச் சந்தையில் மற்ற நாடுகளோடு ஒப்புநோக்கும்போது நமது நாட்டின் பன்முகத்தன்மை சிங்கப்பூருக்கு கிடைத்துள்ள பலம் என்று துணைப்பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
இது, உலகெங்கிலும் உள்ள பங்காளித்துவ நிறுவனங்களுடன் இணையவும், வெவ்வேறு சந்தைகளையும் பண்பாடுகளையும் புரிந்துகொள்ளவும், பல்வேறு கண்ணோட்டங்களும் மரபுகளும் ஒன்றுகலப்பதன்மூலம் புதுமைகளைப் படைக்கவும் நமக்கு உதவுகிறது என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் ரமலான் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (பிப்ரவரி 14) இரவு நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் ஒளியூட்டு விழாவில் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் இவ்வாறு கூறினார்.
“பொருளியலுக்கு அப்பால், நமது பல கலாசாரத் தன்மையே நமது சமூக உறுதிப்பாட்டின் அடித்தளமாகும்.
“உலகம் பிளவுபட்டுவரும் வேளையில், வெவ்வேறு சமூகங்கள் ஒன்றிணைந்து வாழ்வது மட்டுமல்லாமல், ஒன்றாகச் செழிக்கவும் முடியும் என்பதற்குச் சிங்கப்பூர் ஒரு சான்றாகத் திகழ்கிறது,” என்றார் அவர்.
விஸ்மா கேலாங் சிராயின் ‘பெர்சாடா புடாயா’ (Persada Budaya) தளத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய திரு கான், விஸ்மா கேலாங் சிராய் என்பது சிங்கப்பூரில் அமைந்திருக்கும் ஓர் இடம் என்பதற்கு அப்பால், அது சிங்கப்பூரின் பல கலாசாரச் சமூகத்தின் நீடித்த வலிமைக்கான சான்று எனக் குறிப்பிட்டார்
‘நாம் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்’ (#KitaRayaBersama) எனும் கருப்பொருளின்கீழ் 2026ஆம் ஆண்டுக்கான கொண்டாட்டங்கள் அதிகாரபூர்வமாகத் தொடங்கின.
விழாவின்போது பெருமழை பெய்தபோதிலும், அது மக்களின் உற்சாகத்தைக் குறைக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
துணைப் பிரதமர் கான், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரான இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இணைந்து ஒளியூட்டைத் தொடங்கி வைத்தனர்.
இரவு 8 மணியளவில் தெருவிளக்குகள் ஏற்றிவைக்கப்பட்டதும் கேலாங் சிராய் வட்டாரத்தின் சாலைகள் அனைத்தும் வண்ணமயமான ஒளிவெள்ளத்தில் மின்னின. வரும் மார்ச் 30ஆம் தேதிவரை இந்த வண்ண விளக்குகள் அப்பகுதியை அலங்கரிக்கும்.
இந்த ஆண்டின் கருப்பொருள், சமூக நல்லிணக்கத்தையும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் வலியுறுத்துகிறது. முஸ்லிம் சமூகத்தினர் மட்டுமன்றி, அனைத்துத் தரப்பு மக்களும் பொதுவான இடங்கள், மரபுகள் வழியாக ஒன்றிணைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஃபைஷால், ரமலான் மாதத்தின் முக்கியத்துவத்தையும் உலகச் சூழலில் சிங்கப்பூரின் நிலையையும் சுட்டிக்காட்டினார்.
“ரமலான் மாதத்திற்குத் தயாராகும்போது, நமக்குக் கிடைத்த நல்லாசிகளுக்கு நன்றியுள்ளவர்களாகவும், ஒருவரையொருவர் கண்ணியமாக நடத்துபவர்களாகவும், தாராள உள்ளம் கொண்டவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.
“உலகெங்கிலும் நடப்பவற்றைப் பார்க்கும்போது, நாம் பெறும் நல்லாசிகளை வெவ்வேறு சமூகங்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசத்திற்காகவும் கொண்டாட வேண்டும்,” என்றார் அவர்.
ஒளியூட்டு நிகழ்ச்சியுடன் சேர்த்து 2026ஆம் ஆண்டுக்கான கேலாங் சிராய் ரமலான் சந்தையும் தொடங்கியது. மார்ச் 21ஆம் தேதிவரை செயல்படும் இச்சந்தை, கடந்த ஆண்டைக் காட்டிலும் மூன்று நாள்கள் கூடுதலாக, அதாவது 36 நாள்களுக்கு நடைபெறும்.
ஐநூற்றுக்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ள இச்சந்தை, சிங்கப்பூரின் ஆகப் பெரிய நோன்புப் பெருநாள் சந்தையாகும். அன்றாடம் காலை 10 மணி முதல் இரவு 11.59 மணி வரையும், நோன்புப் பெருநாளன்று காலை 6 மணி வரையும் சந்தை செயல்படும்.
பண்டிகைக் கால உணவுகள், பாரம்பரியத் தின்பண்டங்கள், பாஜு குரோங், சொங்கோக் போன்ற கலாசார உடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
கடைக்காரர்களிடையே மின்னிலக்கப் பயன்பாட்டை ஊக்குவிக்க, முதன்முறையாக இச்சந்தை வர்த்தக நிறுவனங்களுடன் பங்காளித்துவம் அமைத்துள்ளது. சந்தைக்கு வரும் மக்கள் ‘கிராப் டைன் அவுட்’ (Grab Dine Out) தளம் மூலம் சலுகைகளைப் பெறலாம்.
அதேவேளையில், தெரிவுசெய்யப்பட்ட விற்பனையாளர்கள் ‘ஷாப்பி’ (Shopee) நேரலை அமர்வுகள் மூலம் தங்கள் வணிகத்தை இணையம் வழியாக விரிவுபடுத்துவர். இது பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைக்கும் முயற்சியாக அமைகிறது.

