டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஜயன்ட், ஷெங் சியோங் பேரங்காடிகளில் முட்டை, அரிசிக்கு $6 வரை தள்ளுபடிகளைப் பெறலாம்.
ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 29 வரை, ஒவ்வொரு சனிக்கிழமையும் வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம்.
சலுகையில் உள்ள பொருள்களின் கட்டணத்தை வங்கி அட்டையில் செலுத்தும்போது வாடிக்கையாளர்கள் அந்தத் தள்ளுபடிகளைப் பெறுவார்கள்.
சிங்கப்பூர்வாசிகள் வாழ்க்கைச் செலவினச் சுமைகளைச் சமாளிக்க உதவும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் டிபிஎஸ் வங்கி $10 மில்லியன் மதிப்பிலான ஆதரவுத் திட்டத்தை அறிவித்தது.
அதன் முதல் கட்ட நடவடிக்கையாக இந்தச் சலுகை உள்ளது.
129 பேரங்காடிகளில் இந்தத் தள்ளுபடி கிடைக்கும். முட்டைக்கு $3 வரையும் அரிசிக்கு $3 வரையும் சலுகை கிடைக்கும். தள்ளுபடிக்காகக் குறைந்தபட்சத் தொகை ஏதும் செலவிட வேண்டியதில்லை.
குறிப்பிட்ட சில அரிசி, முட்டைகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். இருப்பு இருக்கும் வரை, ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் இந்தத் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்தத் தகவல்களை டிபிஎஸ் வங்கி வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ஒரு பொருளுக்கு ஒரு முறை மட்டுமே இந்தச் சலுகையைப் பெற முடியும்.
தள்ளுபடியில் உள்ள பொருள்களை அதன் இணையப் பக்கத்திலும் டிபிஎஸ் பதிவிட்டுள்ளது.
ஜயன்டின் 5 கிலோகிராம் ஜாஸ்மின் அரிசி, பார்ம் பிரஷ் முட்டைகள் (30) உள்ளிடவை சலுகை விலையில் உள்ளன.
செப்டம்பர் மாதம் முதல் ‘பேலா’ செயலி மூலம் $3 ரொக்கத்திருப்பம் (cashback) வழங்கப்படும் என்று டிபிஎஸ் தெரிவித்துள்ளது. இது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அது கூறியது.
2023ஆம் ஆண்டு முதல், டிபிஎஸ் வங்கி வாழ்க்கைச் செலவின ஆதரவு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.

