தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் நீண்டகால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ‘ஜிஐசி’ நம்பிக்கை

2 mins read
நியூயார்க்கில் ஆற்றிய உரையில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்
9c035315-0853-43fd-8d5a-dc7e81dcaf99
அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘ஜிஐசி’ 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் முதலீடு செய்துவருவதை மூத்த அமைச்சர் லீ சுட்டினார். - படம்: மின்னிலக்க மேம்பாடு, தகவல் அமைச்சு

சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான ‘ஜிஐசி’, அமெரிக்காவில் தொடர்ந்து முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

புவிசார் அரசியல் சூழல் மேலும் சிக்கலடையும் வேளையிலும் அமெரிக்கப் பொருளியலில் நீண்டகால முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாக ‘ஜிஐசி’ நம்பிக்கை கொண்டுள்ளது என்று புதன்கிழமை (நவம்பர் 13) திரு லீ கூறினார்.

நியூயார்க் சிட்டியில் நடைபெற்ற ‘ஜிஐசி இன்சைட்ஸ் 2024’ விருந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

இடர்களைக் கருத்தில்கொண்டு லாபங்களை மதிப்பிடுவது மிகவும் கடினமானது என்றார் திரு லீ.

“உத்தேசக் கணக்கீடுகளின் அடிப்படையில் மட்டும் நாம் இப்போது மதிப்பிடுவதில்லை. கணிப்பதற்குக் கடினமான நிச்சயமற்றதன்மை, எதிர்பாராப் பின்விளைவுகள் போன்ற அம்சங்களையும் மதிப்பிடுகிறோம்,” என்று மூத்த அமைச்சர் கூறினார்.

‘ஜிஐசி’ போன்ற நிறுவனங்கள் இப்போது முற்றிலும் மாறுபட்ட சவால்களை ஒருங்கே கையாள வேண்டியிருக்கிறது என்றார் அவர்.

பொருளியல் மந்தம், அதைத் தொடர்ந்து மீட்சி எனும் வழக்கமான சுழற்சி நீடிக்குமா, தடைபடுமா? சந்தைகள் வழக்கம்போலச் செயல்படுமா, புவிசார் அரசியல் நிகழ்வுகளால் பாதிக்கப்படுமா? போன்ற கேள்விகளை அவை எதிர்கொள்கின்றன என்றார் திரு லீ.

இருப்பினும், அமெரிக்க முதலீடுகள் குறிப்பாக, பருவநிலைத் தொழில்நுட்பம், நீடித்த நிலைத்தன்மை சார்ந்த துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் ‘ஜிஐசி’ நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார். திரு லீ, ‘ஜிஐசி’யின் இயக்குநர் அவைத் தலைவராகச் செயல்படுகிறார்.

அமெரிக்காவில் செய்யப்படும் அத்தகைய முதலீடுகள், உலகப் பொருளியலைக் கரிமமற்றதாக்க உதவுவதுடன் அமெரிக்கச் சமூகங்களுக்கும் உதவியாய் இருப்பதை அவர் சுட்டினார்.

எடுத்துக்காட்டாக, வெஸ்ட் வெர்ஜீனியாவில் கட்டப்படும் மின்கலன் உற்பத்தி ஆலை, நூற்றுக்கணக்கான வேலைகளை உருவாக்கும். மற்றொரு திட்டம், அமெரிக்கா முழுவதுமுள்ள பள்ளிப் பேருந்துகளை மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்றுவது தொடர்பானது.

‘ஜிஐசி’ நிறுவனம் அமெரிக்காவில் முதலீடு செய்யத் தொடங்கி இந்த ஆண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இருதரப்புக்குமிடையே, வலுவான, பலனளிக்கக்கூடிய, இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடிய பங்காளித்துவம் நிலவுவதாகத் திரு லீ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்