2027 முதல் மீத்திறன் கல்வித்திட்டம் நீக்கப்படும்: கல்வி அமைச்சு

2027 முதல் மீத்திறன் கல்வித்திட்டம் நீக்கப்படும்: கல்வி அமைச்சு

2 mins read
c50bc2e1-a6a2-4e72-bab6-11549c10e8b3
கற்றலிலும் மற்ற துறைகளிலும் திறமையான தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆதரிப்பதற்காக ஒரு புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறை செயல்படுத்தப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘ஜிஇபி’ (Gifted Education Programme) எனப்படும் மீத்திறன் கல்வித்திட்டம் 2027ஆம் ஆண்டிலிருந்து நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நடைபெற்ற கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது திரு லீ இதனைத் தெரிவித்தார்.

கற்றலிலும் இதர துறைகளிலும் திறன்மிக்க தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆதரிப்பதற்காக ஒரு புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறை செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

இந்த அணுகுமுறையின்கீழ் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியலில் மேம்பட்ட, பன்முகப் பாடங்கள் வழங்கப்படும்.

“மாணவர்கள் தங்கள் திறன்களைத் திறம்பட வளர்த்துக்கொள்ள தற்போது உள்ள பள்ளி அடிப்படையிலான ஏற்பாடுகளை அணுகுவதில் கல்வி அமைச்சு அதிக மாணவர்களுக்கு ஆதரவளிக்கும்,” என்றார் திரு லீ.

இந்தப் புதிய அணுகுமுறை பாடத்திட்ட நீட்டிப்புகள் மற்றும் பள்ளிக்குப் பிந்தைய திட்டங்களை உள்ளடக்கியது.

மொத்தம் 15 தொடக்கப்பள்ளிகள், இந்தப் புதிய கற்றல் பாடங்களை வழிநடத்த நியமிக்கப்பட்ட மையங்களாகச் செயல்படும்.

கடந்த ஆண்டு சோதனை செய்யப்பட்ட பாடத்தொகுதிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன என்று சுட்டிக்காட்டினார் திரு லீ.

கிட்டத்தட்ட 7% மாணவர்களிலிருந்து 10% மாணவர்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசதி குறைந்த மாணவர்களுக்குக் கூடுதல் ஆதரவு

பள்ளிகளில் செயல்முறைகள் மற்றும் கல்வித் திட்டங்களை வலுப்படுத்த இவ்வாண்டு 100 பள்ளிகளிலிருந்து 157 பள்ளிகளுக்கு அதிக மனிதவளமும் நிதியும் வழங்கப்படும்.

வசதிகுறைந்த பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவை வழங்குவதற்காக கல்வி அமைச்சு பள்ளிகளுடன் இணைந்து செயல்படும் என்றும் திரு லீ கூறினார்.

“அந்த மாணவர்களுக்கு முழுமையான ஆதரவு வழங்க பள்ளிகள், பொது நிறுவனங்கள் மற்றும் சமூகப் பங்காளிகளிடையே ஒத்துழைப்பை அமைச்சு தொடர்ந்து வளர்க்கும்,” என்றும் அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்