இயற்கையைப் புகைப்படமெடுப்பது என்பது 72 வயதிலும் சிங்கப்பூர் நிரந்தரவாசியான திருவாட்டி வைதேகி சந்திரசேகருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.
அந்த உற்சாகத்துடன் ஒருநாள் அவர் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா மாநிலத்தின் தேசிய இயற்கைப் பூங்காவில், சூரியன் மறையும் நேரத்தில் நீர் நிலையை நெருங்கும் ஒட்டகச்சிவிங்கியைப் பார்க்க நேரிட்டது.
அச்சமயம் அந்த ஒட்டகச் சிவிங்கி தலைகுனிந்து நீரைப் பருகியது. சிறிது நேரத்தில் தனது தலையை உயர்த்தி அசைத்தபடி அது நீரை இரைத்து வீசியது. அந்த ‘மாயாஜால’ தருணத்தை உடனே புகைப்படமெடுத்தார் திருவாட்டி வைதேகி.
புகைப்படத்தில் அஸ்தமிக்கும் சூரிய ஒளி பின்புறமிருக்க ஒட்டகச்சிவிங்கியிடமிருந்து சூழன்று வெளியேறிய நீர்த்துளிகள் நட்சத்திரங்கள் போல ஒளிர்ந்தன. மிகவும் அரிதான அந்தப் புகைப்படத்துக்கென உலக விருது வழங்கப்பட்டுள்ளது.
நீரில் ‘பெலே’ நடனம் என்ற ஆங்கிலத் தலைப்பில் பாலூட்டும் விலங்குகளின் பழக்கவழக்கங்கள் பிரிவில் 2026ஆம் ஆண்டுக்கான உலக இயற்கைப் புகைப்படப் போட்டியில் தங்க விருதை திருவாட்டி வைதேகியின் புகைப்படம் வென்றுள்ளது.
விருது நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசியில் நடந்துள்ளது. ஏழாம் ஆண்டாக புகைப்படப் போட்டி நடந்துவருகிறது. ஆயிரக்கணக்கில் புகைப்படங்கள் ஆறு கண்டங்களை உள்ளடக்கிய 51 நாடுகளிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டன.
போட்டியில் சிங்கப்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே வெற்றியாளர் திருவாட்டி வைதேகி சந்திரசேகர் ஆவார். இதற்கு முன்னதாக பல ஒட்டகச் சிவிங்கிகளை புகைப்படமெடுத்துள்ள அவர், குறிப்பிட்ட இந்த விலங்கே அதிக நீரை இரைத்தது என்று குறிப்பிட்டார்.

