செங்காங் வட்டாரத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 7 வயது சிறுமி மாண்டார்.
அவர் மீது வேன் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.
23 ஃபெர்ன்வேல் லேனில் நிகழ்ந்த அந்த விபத்து தொடர்பாக காலை 6.20 மணி அளவில் தகவல் கிடைத்தது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
பாதசாரியான அந்தச் சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அச்சிறுமி செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டியதற்காகச் சிறுமி மீது மோதியதாகக் கூறப்படும் வேனை ஓட்டிய 67 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
நான்கு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் காயம்
இதனிடையே, ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் வியாழக்கிழமை நேர்ந்த, நான்கு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் காயமுற்றதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
விபத்து தொடர்பில் ‘டெலிகிராம்’ சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட படத்தில், விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று, இன்னொரு கார்மீது ஏறி நிற்பதைக் காட்டியது.
மரின் பரேட் வெளிவழிக்கு அடுத்து, சாங்கியை நோக்கிச் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் நேர்ந்த இவ்விபத்து தொடர்பில் காலை 8.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 49 மற்றும் 62 வயதுடைய இரு கார்களின் ஓட்டுநர்கள் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
அவர்கள் சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மொத்தம் 136 பேர் மாண்டனர். 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 25.9 விழுக்காடு அதிகம்.