மார்சிலிங் சாலைச் சந்திப்பில் சிறுமி ஒருவர் தனியாக நடந்து செல்லும் காணொளி, சாலைப் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காணொளியை ‘ரோட்ஸ்.எஸ்ஜி’ ஃபேஸ்புக் பக்கம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) வெளியிட்டது.
மார்சிலிங் ஹைட்சுக்கு எதிரே உள்ள நடையர் கடக்கும் இடத்தில் அந்தச் சிறுமி தனியாக நின்றிருந்தார். பின்னர் நடையர் கடப்பதற்கான சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தபோதும், அவர் திடீரென சாலையின் நடுவே நடந்து சென்றார்.
அந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் சாலையைக் கடக்காததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
சில நொடிகளுக்குப் பிறகு, ஒரு பெண் ஓடிவந்து சிறுமியைத் தூக்கிச் சென்றார்.
பெற்றோர் அல்லது பணிப்பெண்கள் கவனக்குறைவாக இருக்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக இணையவாசிகள் கருத்துத் தெரிவித்தனர்.
சில நாள்களுக்கு முன்பு, பீஷான் ஸ்திரீட் 11ல் சாலையைக் கடந்த ஒரு பள்ளி மாணவர் மீது கார் மோதியது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் சாலைப் பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுவதில்லை என கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் ரொனால்ட் டான் கடந்த ஏப்ரல் மாதம் வேதனை தெரிவித்திருந்தார்.
சிறார்களைப் பாதுகாப்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பு எனத் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, போக்குவரத்து காவல்துறை, நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை வலியுறுத்தியிருந்தன.
தேசியப் பதிவகத் தரவுகளின்படி, பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் காயமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அவற்றில் மிதமான அல்லது கடுமையான பாதிப்புகளில் பெரும்பாலானவை வாகன விபத்துகள், கீழே விழுதல் போன்றவற்றால் ஏற்படுகின்றன.
பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போக்குவரத்து காவல்துறையும் சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றமும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றன.
