சர்க்கிட் ரோடு ஈரச்சந்தை, உணவங்காடி நிலையத்தில் தங்கி இருந்த 15 வயது சிறுமி குறித்த மேல்விவரங்களை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்டு உள்ளது.
ஏறத்தாழ ஓராண்டு காலம் ஈரச்சந்தையில் குளித்துவிட்டு, அங்கேயே உறங்கிய அச்சிறுமி தற்போது சிறப்புக்கல்விக்கான பள்ளியில் பயில்வதாகவும் பிறருடன் பேசக் கற்றுக்கொள்வதாகவும் அது தெரிவித்துள்ளது.
அந்தச் சிறுமி பேசுவது அரிது என்றும் வெறும் சைகையை மட்டுமே காட்டுவதாகவும் கடைக்காரர்கள் சிலர் இதற்கு முன்னர் கூறி இருந்தனர்.
ஆனால், தற்போது தாம் சொல்ல வேண்டியதையும் தமது அடிப்படைத் தேவைகளையும் சிறிய வார்த்தைகளால் வெளிப்படுத்துவதாக, ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ எழுப்பிய வினாக்களுக்குப் பதிலளிக்கையில் அமைச்சு கூறியது.
தமது தந்தை வாடகைக்கு எடுத்திருந்த காய்கறிக் கடையின் ஒரு பகுதியில் 11 மாதங்கள் அந்தச் சிறுமி தங்கி இருந்தார். அவ்விருவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.
கடந்த ஏப்ரல் மாதம் தேசிய சுற்றுப்புற வாரியம் நடத்திய சோதனையின்போது சிறுமி பற்றி தெரியவந்தது.
உடனடியாக, அமைச்சின் குழந்தைப் பாதுகாப்புச் சேவையிடம் வாரியம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, சிறுமியை தனது பராமரிப்பில் எடுத்துக்கொண்ட அமைச்சு, சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் சேர்த்தது.
மே மாதம் இறுதி முதல், வளர்ப்புப் பெற்றோர் பராமரிப்பில் இருக்கும் சிறுமி தற்போது நிலைமையப் புரிந்துகொண்டு நடப்பதாக அமைச்சு புதன்கிழமை (அக்டோபர் 23) தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
63 வயது தந்தை ஒருவர், இள வயது பிள்ளை ஒன்றைக் கவனிக்காமல் விட்டது தொடர்பான விசாரணைக்கு உதவி வருவதாக இதற்கு முன்னர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு இருந்தது.
சம்பவம் தொடர்பிலான காவல்துறையின் விசாரணை தொடருகிறது.

