சிறுமிகள் மானபங்கம்: பாலர் பள்ளிக்கு $26,200 அபராதம்

2 mins read
747ae14f-d1f1-4b2a-a539-86467df3ff45
பாலர் பள்ளியில் சமைக்காரராக வேலைசெய்த டியோ குவான் ஹுவாட், 2023ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் நவம்பருக்கும் இடையே ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான மூன்று பெண் பிள்ளைகளை மானபங்கம் செய்ததைத் திங்கட்கிழமை (அக்டோபர் 27) ஒப்புக்கொண்டார். - படம்: டியோ குவான் ஹுவாட் / லிங்க்ட்இன்

பாலர் பள்ளியின் முன்னாள் சமையல்காரர் மூன்று இளம்பிள்ளைகளை மானபங்கம் செய்ததைத் தொடர்ந்து குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு, அதற்கு அபராதம் விதித்துள்ளது.

அத்துடன் புதிய பிள்ளைகள் அங்குச் சேர்வதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாலர் பள்ளியில் வேலை செய்த ஊழியர்கள் நால்வருக்கு எதிராக நடவடிக்கையையும் அமைப்பு எடுத்துள்ளது. அவர்களில் மூவர் இனிமேல் பாலர் பள்ளித் துறையில் பணிபுரிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்து அமைப்பு புதன்கிழமை (அக்டோபர் 29) அறிக்கையொன்றை வெளியிட்டது. பள்ளியின் பாதுகாப்பு நடைமுறைகளில் பல குறைபாடுகள் இருந்தது புலனாய்வில் தெரியவந்ததாக அமைப்பு தெரிவித்தது. அவை பிள்ளைகளின் பாதுகாப்புக்குப் பாதிப்பை உண்டாக்கியதாக அறிக்கை சொன்னது.

பாலர் பள்ளியில் சமையல்காரராக இருந்த 61 வயது டியோ குவான் ஹுவாட், 2023ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் நவம்பருக்கும் இடையே ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான மூன்று பெண் பிள்ளைகளை மானபங்கம் செய்ததைத் திங்கட்கிழமை (அக்டோபர் 27) ஒப்புக்கொண்டார்.

பிள்ளைகள் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர் தகாத செயலில் ஈடுபட்டார். அவரின் குற்றங்கள் பள்ளியின் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாயின. இருப்பினும் படக்காட்சிகள் அழிக்கப்பட்டன. சில வாரங்களுக்குப் பிறகே காவல்துறைக்கு அதுபற்றித் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் அடையாளங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பாலர் பள்ளியின் பெயர் வெளியிடப்படவில்லை.

2024ஆம் ஆண்டு மே மாதம், பாலர் பள்ளிக்கு $26,200 அபராதம் விதிக்கப்பட்டது. புதிதாகப் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கும் பள்ளிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன் உரிமமும் 36 மாதத்திலிருந்து 6 மாதத்திற்குக் குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்