நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, குடியிருப்புப் பேட்டைகளுக்குள் இருக்கும் பள்ளிகளும் சமூக வர்த்தகங்களும் அக்கம்பக்கத்தைத் தூய்மையாய் வைத்திருக்க வலியுறுத்தும் ‘கிளீன்ஹூட்’ (Cleanhood) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார்.
செந்தோசேவில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் திருவாட்டி ஃபூ, ‘கீப் சிங்கப்பூர் கிளீன்’ எனும் வருடாந்திர சிங்கப்பூர்த் தூய்மை இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்.
இதற்கு முன் அறியப்பட்ட நிலைத்தன்மை ‘பிரைட் ஸ்பொட்’ என்ற திட்டம் மேம்படுத்தப்பட்டு கிளீன்ஹூட் திட்டத்தைச் பொதுச் சுகாதார சங்கம் அமைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு பொதுச் சுகாதார சங்கம் ஏறக்குறைய 2,500 துப்புரவுப் பணிகளை மேற்கொண்டது. கிட்டத்தட்ட 1,500 சிங்கப்பூர்த் தூய்மை இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தோடு 76,000 பங்காளிகளையும் தொண்டூழியர்களையும் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தியது.
இவ்வாண்டு இறுதிக்குள் பொதுச் சுகாதாரச் சங்கம் கிளீன்ஹூட் திட்டத்தை 15 பள்ளிகளுக்குக் கொண்டுசெல்ல இலக்குக் கொண்டுள்ளது.
இனிவரும் ஆண்டுகளில் சமூக வர்த்தகங்கள், பேரங்காடிகள், அக்கம்பக்கக் கடைகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சக மாணவர்களுடன் தூய்மைப்படுத்தும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் மாணவர்களைச் சுற்றுப்புறத் தூதர்களாக மாற்ற கிளீன்ஹூட் முற்படுகிறது என்றார் அமைச்சர் ஃபூ.
சிங்கப்பூரின் வெற்றிக்கான படிக்கற்களில் தூய்மையாக இருக்கும் பொது இடங்களும் ஒன்று. தூய்மையற்ற சுற்றுப்புறம் ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய தலைமுறைகள் வருவதால் சிங்கப்பூர்த் தூய்மை இயக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம் என்று அமைச்சர் ஃபூ வலியுறுத்தினார்.

