சிக்லாப் வட்டாரத்தில் பூங்கா அமைய உதவிய குளோபல் இந்தியன் பள்ளி

சிக்லாப் வட்டாரத்தில் பூங்கா அமைய உதவிய குளோபல் இந்தியன் பள்ளி

படம்: எஸ்பிஎச் மீடியா

18 Sep 2026 - 9:38 pm

2 mins read

பல ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர் சிக்லாப் வட்டாரக் குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் பூங்கா ஒன்றைப் பெற்றுள்ளனர். அதற்காக அவர்கள் குளோபல் இந்தியன் அனைத்துலக பள்ளிக்கு நன்றி தெரிவிக்கலாம் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.

தமது ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் ஜூ சியாட் பிரிவில் அமைந்துள்ள ‘யர்ரோவ் பூங்கா’ (Yarrow Park), செவியட் ஹில்லில் குளோபல் இந்தியன் அனைத்துலக பள்ளி குத்தகைக்கு எடுத்திருந்த இடத்தில் இருந்த ஐந்து கூடைப்பந்துத் திடல்களின் ஒரு பகுதியில் உருவாக்கப்பட்டது என்றார் அவர்.

‘குளோபல் பள்ளிகள் குழுமம்’ அமைப்பின்கீழ் இயங்கும் 12 பள்ளிகளில் ஒன்றான அந்தப் பள்ளி, இவ்வாண்டு பொங்கோலில் உள்ள அதன் தற்போதைய இடத்திற்கு மாறியது.

‘குளோபல் பள்ளிகள் குழுமம்’ அமைப்பின் 25வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் பொங்கோல் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய திரு டோங், ஜூ சியாட் சமூகத்திற்கு குளோபல் இந்தியன் அனைத்துலக பள்ளி ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார்.

சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் சில்பாக் அம்புலே, குளோபல் பள்ளிகள் குழுமம் அமைப்பின் தலைவர் மற்றும் இணை நிறுவனர் அதுல் தெமுர்னிகர் ஆகியோர் அடங்கிய அவையினரிடையே பேசிய அவர், பூங்காவிற்காகப் பள்ளியின் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்குமாறு கேட்டபோது பள்ளி நிர்வாகம் உடனடியாக ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்.

உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங், “சிக்லாப் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிறிய சாலைகளைக் கொண்ட மிக நெருக்கமான குடியிருப்புப் பகுதியாகும். அங்கு பொது இடங்கள் அதிக அளவில் இல்லை,” என்றார்.

“நான் ஒரு பொது இடத்தை உருவாக்குவது குறித்த யோசனையை திரு அதுலிடம் முன்வைத்து, தயக்கத்துடன் ‘சமூகத்திற்கான ஒரு பூங்காவை உருவாக்க உங்கள் பள்ளி வளாகத்தின் ஒரு சிறிய பகுதியை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமா?’ என்று கேட்டேன்.

“சற்றும் யோசிக்காமல், ‘நிச்சயமாக. இதை எப்படிச் செயல்படுத்தலாம் என்று பார்ப்போம்’ என்று திரு அதுல் கூறினார்,” என்றார் அமைச்சர்.

அதன்பின்னர், இப்பள்ளி தேசியப் பூங்காக் கழகம் மற்றும் சிங்கப்பூர் நில ஆணையத்துடன் இணைந்து பூங்காவிற்கான நிலத்தை அளித்தது. அந்தப் பூங்கா 2022ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்