கோலாலம்பூர்: ஜப்பானின் முன்னணி கடல்சார் செய்தித்தாளான ‘ஜப்பான் மரிடைம் டெய்லி’, ‘வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவைகள்’ என்ற தலைப்பில் ஓர் அனைத்துலகக் கருத்தரங்கை அக்டோபர் 5ஆம் தேதியன்று சிங்கப்பூரில் நடத்தவுள்ளது.
சிங்கப்பூர் பங்குச் சந்தை ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்வு, விளக்கக்காட்சிகள், ஒரு குழு விவாதம் மூலம் முக்கியக் கப்பல் போக்குவரத்து முன்னெடுப்புகள், கடல்சார் போக்குவரத்தின் எதிர்காலம் குறித்து ஆராயும் என்று ‘ஜப்பான் மரிடைம் டெய்லி’ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓஷன் நெட்வொர்க் எக்ஸ்பிரஸ், சிங்கப்பூர் பங்குச் சந்தை, ‘கேப்லர்’ மற்றும் பிற அனைத்துலக அமைப்புகளின் மூத்த கடல்சார் தலைவர்கள் கலந்துகொள்ளும் “கடல்சார் எதிர்காலத்திற்கான பாதையை வகுத்தல்” கருத்தரங்கிற்கான பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது.
ஓஷன் நெட்வொர்க் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டில் ஓலே பாரெலெட் சிறப்புரை ஆற்றுவார். அதேவேளையில் சிங்கப்பூர் பங்குச் சந்தைக் குழுமத்தின் இயக்குநர் கென்னத் இங் ஒரு விளக்கக்காட்சியை வழங்குவார். மேலும் கேப்லர் நிறுவனத்தின் முதன்மை கனரக வடிபொருள் ஆய்வாளர் ரோஸ்லான் கசாவ்னே, ‘புவிசார் அரசியல் சீர்குலைவு ஆசிய கப்பல் போக்குவரத்தை எவ்வாறு மறுவடிவமைக்கிறது’ என்பது குறித்து உரையாற்றுவார்.
ஜப்பான் மரிடைம் டெய்லியின் முதன்மை ஆசிரியர் யோஹே மிசாகி நெறிப்படுத்தும் ஒரு குழு விவாதம், பெருகிவரும் நிச்சயமற்ற உலகளாவிய சூழலுக்கு மத்தியில் உருவாகிவரும் போக்குவரத்துத் தேவைகளையும் முக்கியத் தொழில் துறை சவால்களையும் ஆராயும் என்று பெர்னாமா செய்தி தெரிவித்தது.


