தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் ஜெர்மனியைச் சேர்ந்த சில்லு உற்பத்தி நிறுவனமான ஸ்டில்டிரோனிக்கும் தைவானைச் சேர்ந்த வேன்கார்ட் இன்டர்நேஷனலும் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 21) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
சிங்கப்பூரில் மாணவர்களுக்குப் பகுதிமின்கடத்தித்துறைக்கான திறன்களைக் கற்பித்து அது தொடர்பான வேலைகளுக்கு அவர்களைத் தயார் செய்வதே ஒப்பந்தத்தின் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தின்கீழ், தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் வேலை அனுபவத்துடனான கல்வி கற்றல் பட்டயச் சான்றிதழ் திட்டத்துக்கு இந்த நிறுவனங்கள் ஆதரவு வழங்கும்.
நுண்மின்னணுவியல் மற்றும் அத்துடன் தொடர்புடைய மற்ற கல்வித் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.
வேலை அனுபவப் பயிற்சிக்கு ஆதரவு வழங்குவதுடன் பட்டயச் சான்றிதழ் பெறும் மாணவர்களுக்கு இத்திட்டம் வேலைகளை வழங்கும்.
அதுமட்டுமல்லாது, பாடத்திட்ட மேம்பாடு குறித்து தொழில்நுட்பக் கல்விக் கழகத்துக்கு பங்காளித்துவ நிறுவனங்கள் ஆலோசனை வழங்க இத்திட்டம் வழிவகுக்கும்.
இத்திட்டங்கள் மூலம் 500க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பகுதிமின்கடத்தித்துறை எட்டு விழுக்காட்டுப் பங்கு வகிப்பதாக அவர் கூறினார்.
உற்பத்தித்துறை ஊழியரணியில் பத்து விழுக்காட்டினர் பகுதிமின்கடத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் என்று திரு டான் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூரின் சில்லு உற்பத்தித்துறை $18 பில்லியன் பெறுமானமுள்ள ஆய்வு, மே்பாட்டு மற்றும் உற்பத்தி சார்ந்த முதலீடுகளை ஈர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் பகுதிமின்கடத்தித்துறையைத் தொடர்ந்து வளரவைப்பதும் உலகளாவிய தயாரிப்பு மற்றும் புத்தாக்க விநியோகச் சங்கிலியில் சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்துவதும் இலக்காக இருப்பதாக திரு டான் கூறினார்.
அந்த நிலையை அடைய வலுவான திறனாளர்கள் தேவை என்றார் அவர்.

