‘ஸ்லஷி’ குளிர்பானத்தில் ‘கிளிசரால்’; கவனம் தேவை எனப் பெற்றோரிடம் வலியுறுத்தல்

1 mins read
82ef5eb0-021a-4ab1-bc75-a19d5da21a86
8 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் ‘ஸ்லஷி’ குளிர்பானத்தை அருந்தக்கூடாது என்று பிரிட்டன் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் - படம்: பெக்சல்ஸ்

‘ஸ்லஷி’ எனும் குளிர்பான வகையில் பயன்படுத்தப்படும் கிளிசரால் திரவத்தால் சிங்கப்பூரில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

‘ஸ்லஷி’ குளிர்பானத்தைப் பருகி பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் பல சிறுவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எட்டு வயதுக்கும் குறைவான சிறுவர்கள் ‘ஸ்லஷி’ குளிர்பானத்தை அருந்தக்கூடாது என்று பிரிட்டன் மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

‘ஸ்லஷி’ குளிர்பானத்தில் இருக்கும் கிளிசரால் திரவத்தால் சிறுவர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

அதை அவர்கள் அதிக அளவில் உட்கொள்ளும்போது கிளிசரின் காரணமாக ஏற்படும் ஒருவித போதை அவர்களுக்கு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன்மூலம் சிறுவர்களுக்குத் தலைவலி, குமட்டல், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு பேரளவில் குறைவது ஆகியவை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்குத் தலை சுற்றல் ஏற்படலாம் என்றும் சிலர் சுயநினைவை இழக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுகுறித்து கவனம் தேவை என்று பெற்றோரிடம் சிங்கப்பூர் உணவு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்