அதிக பாலர் பள்ளிகளில் தமிழ் கற்றுக்கொடுப்பது இலக்கு: விக்ரம் நாயர்

3 mins read
67ed9857-c74e-4e0f-a06c-172d111f45da
சன் பிளாசாவுக்கு அருகில் உள்ள திடலில் நடந்த மசெக பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய விக்ரம் நாயர். சுகாதார அமைச்சரும் செம்பவாங் நாடாளுமன்றக் குழுத்தொகுதியின் வேட்பாளருமான ஓங் யீ காங் உட்பட செம்பவாங் குழுத்தொகுதி, செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி வேட்பாளர்கள் மேடையில் இருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிக பாலர் பள்ளிகளில் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது இலக்கு என்று தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார் செம்பவாங் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர் விக்ரம் நாயர்.

“தமிழ், சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்று. சிங்கப்பூரில் ஐந்து விழுக்காட்டினர் தமிழ் பேசுகின்றனர். அதனை வாழும் மொழியாக நிலைக்க வைப்பது சவால்மிக்கதுதான். அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து இருப்பதால் மொழி மேலும் சிறப்பாக வளர்ச்சி அடையும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார் அவர்.

சன் பிளாசா கடைத்தொகுதிக்கு அருகில் உள்ள திடலில் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் தமிழில் உரையாற்றினார்.

மொழி மேம்பாட்டுக்குத் தமிழ்மொழி விழா உதவுகிறது என்றும் இவ்வாண்டு 46 நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என்றும் சொன்னார் தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவரான திரு விக்ரம்.

தமது தந்தையால் தொடர்ந்து தமிழ் படிக்க இயலவில்லை என்றும் தாம் தமிழ் படித்ததாகவும் கூறிய அவர், “இன்று பாலர் பள்ளி முதல், உயர்நிலைப்பள்ளி வரைத் தமிழ் கற்க முடியும் எனும் நிலை உள்ளது. தற்போது அதிக தமிழ்ப் புழக்கம் இல்லாத குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்குக் கூடுதல் ஆதரவளிக்க வேண்டியுள்ளது,” என்று தெரிவித்தார்.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஆலோசகரான அவர், “தமிழாசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சங்கம் முயல்கிறது. தமிழ்மொழியைக் கற்க முன்வருவோருக்கு ஆதரவளிப்பதும் இலக்கு,” என்றார்.

“சிங்கப்பூரின் பன்மொழிச் சூழலைக் கட்டிக்காப்பதில் மசெக கடப்பாடு கொண்டுள்ளது. அதற்காக நிறைய செய்கிறோம். இன்னும் முனைப்போடு செயல்பட ஆதரவு அளியுங்கள்,” எனக் கேட்டுக்கொண்டார்.

கூரையுடன் கூடிய 154 நடைபாதைகள், 44 உடற்பயிற்சிப் பூங்காக்கள், 28-இலிருந்து 60ஆக அதிகரித்துள்ள பசுமைப் பூங்காக்கள் எண்ணிக்கை, பசுமைவெளிகள், அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டங்கள் எனக் கடந்த ஐந்தாண்டுகளில் செம்பவாங் குழுத்தொகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களைப் பற்றி அத்தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ள திரு விக்ரம் பேசியுள்ளார்.

அத்திட்டங்கள் அனைத்தும் செம்பவாங் வட்டாரத்தைச் சிறந்த இல்லமாக மாற்ற உதவியுள்ளன என்றார் செம்பவாங் நகர மன்றத் தலைவருமான திரு விக்ரம்.

ஈஸ்ட் கோஸ்ட், மரினா பே, லிம் சூ காங் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் சைக்கிளோட்ட இணைப்புப் பாதைகள், அதிகமான சூரிய மின்சக்திப் பலகைகள் என மேலும் பல திட்டங்கள் அப்பகுதிக்கு வரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தற்காப்புக்காக ஒதுக்கப்படும் நிதியைக் கணிசமான அளவு குறைத்து பிற திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டுமெனச் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி கூறியது. அக்கட்சியைத் தவிர மற்ற எந்தக் கட்சியும் இதனை வலியுறுத்தாது என நினைக்கிறேன்.

“நாம் யாரும் போரை விரும்புவதில்லை. ஒருவேளைப் போர்ச் சூழல் எழுந்தால், நட்பு நாடாகவே இருந்தாலும் மற்ற நாடுகள் நம்மைக் காக்க வருமா?” எனக் கேள்வியெழுப்பினார் திரு விக்ரம்.

தற்காப்பு, வெளியுறவுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவரான அவர், “அமெரிக்கா முதலிய நாடுகளுடன் சிங்கப்பூருக்குத் தற்காப்பு உறவுகள் உள்ளன. எனினும், போரில் நமக்கு உதவி செய்ய நட்பு நாடுகளிடம் உதவி கேட்பது முறையாகாது,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் வர்த்தகம் முக்கியமானது என்ற திரு விக்ரம், “சிங்கப்பூரில் வர்த்தகம் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட மும்மடங்கானது. உலக வர்த்தகம் பாதிக்கப்பட்டால் நம் பொருளியல் வளர்ச்சி பாதிப்படையும். அதனை எதிர்கொள்ள வலுவான அரசு தேவை,” என்றும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்