ஆடு ஆண்டு நினைவு நாணய முன்பதிவு தொடக்கம்

ஆடு ஆண்டு நினைவு நாணய முன்பதிவு தொடக்கம்

படம்: சிங்கப்பூர் நாணய ஆணையம்

19 Nov 2026 - 4:25 pm

2 mins read

நாணயச் சேகரிப்பாளர்கள் வரும் சீனப்புத்தாண்டின் ஆடு ஆண்டு (Goat Almanac) நினைவு நாணயங்களுக்கான முன்பதிவுகளை டிசம்பர் பதின்மூன்றாம் தேதி வரை சிங்கப்பூர் நாணயச் சாலையில் (The Singapore Mint) மேற்கொள்ளலாம்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கான சீனச் சக்கரத்தின் எட்டாவது விலங்கான ஆட்டின் உருவம், ‘லிட்டில் குயிலின்’ (Little Guilin) என அழைக்கப்படும் புக்கிட் பாத்தோக் பூங்காவின் பின்னணி ஆகியவை இந்நாணயங்களில் இடம்பெற்றுள்ளன. கற்சுரங்க ஏரியைச் சுற்றியுள்ள தனித்துவமான பாறை அமைப்புகளுக்கு இப்பூங்கா புகழ்பெற்றது.

சட்டப்படி செல்லுபடியாகும் இந்நாணயங்கள், வெவ்வேறு முகமதிப்புகள், வடிவங்கள், உலோகக் கலவைகள், அச்சு வேலைப்பாடுகளுடன் பத்து வகைகளில் கிடைக்கும் எனச் சிங்கப்பூர் நாணய ஆணையம் வியாழக்கிழமை (நவம்பர் 19) வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

இவற்றில் நிக்கல் பூசப்பட்ட துத்தநாக நாணயம் 2 வெள்ளி முகமதிப்பில் வட்ட வடிவிலும் , 999 தூய வெள்ளி நாணயங்கள் முழு வண்ணத்தில் 2 வெள்ளி வட்ட வடிவிலும், 5 வெள்ளி மலர் வடிவிலும் வெளியிடப்படுகின்றன. மேலும், 999 தூய வெள்ளி நாணயங்கள் 5 வெள்ளி எண்கோண வடிவிலும், 20 வெள்ளி வட்ட வடிவிலும், 80 வெள்ளி செவ்வக வடிவிலும் கிடைக்கும்.

பல்வேறு நாணயங்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்புகளிலும் இவை விற்பனைக்கு உள்ளன. நிக்கல் பூசப்பட்ட துத்தநாக நாணயத்தைத் தவிர மற்ற அனைத்து நாணயங்களுக்கும் சிறப்புத் தொகுப்புகளுக்கும் வரிசை எண் கொண்ட நம்பகத்தன்மைச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஒவ்வொரு நாணயத்தின் முன்புறத்திலும் 2027ஆம் ஆண்டுடன் சிங்கப்பூர் அரசாங்கச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். நவம்பர் 19 முதல் டிசம்பர் 13 வரை இதற்கு முன்பதிவு செய்யலாம்.

விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால் குலுக்கல் முறையில் நாணயங்கள் ஒதுக்கப்படும். ஜனவரி 1ஆம் தேதி முதல் கடைகளிலும் இணையம் வழியாகவும் வாங்கலாம்.

குறிப்புச் சொற்கள்