தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்: இந்தியாவில் சவரன் ரூ.70,000ஐ நெருங்கியது

2 mins read
ec580992-bbc6-4a53-b8b2-e38cf1dbcc35
பாதுகாப்பான முதலீடு என்பதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றனர். - படம்: இபிஏ

கேன்பரா: தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள் உலகப் பொருளியல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் பணம் போடுவதைப் பாதுகாப்பானதாகக் கருதுகிறார்கள்.

தங்கம் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவுன்ஸ் தங்கம் US$3,200க்கு (S$4,227) உயர்ந்துவிட்டது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) ஆசிய வர்த்தகம் தொடங்கியதும் தங்கத்தின் விலை 1.3 விழுக்காடு ஏற்றம் கண்டது.

சிங்கப்பூரில் காலை 8.43 மணிக்கு 1.2 விழுக்காடு அதிகரித்து அவுன்ஸ் US$3,215.73 என விற்பனை ஆனது. வாராந்தர அடிப்படையில் ஏறத்தாழ 6 விழுக்காடு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரி தொடர்பான அறிவிப்புகளால் அமெரிக்க பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. உலகளாவிய பொருளியல் மந்தம் வரக்கூடும் என்ற அச்சத்தால் கையிருப்பில் இருந்த அமெரிக்க டாலரையும் சேமிப்புப் பத்திரங்களையும் விற்பதில் முதலீட்டாளர்கள் தீவிரம் காட்டினர்.

இந்த வாரம் அவர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகம் திரும்பியது. பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதால் ஏராளமான முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றனர்.

அதன் எதிரொலியாக, தங்கத்தின் விலை விண்ணை நோக்கிப் பறக்கிறது.

வரி உயர்வை 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்போவதாக திரு டிரம்ப் அறிவித்துள்ள போதிலும், பொருளியல் அபாயங்களும் நிச்சயமற்ற நிலையும் நீடிக்கின்றன.

அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் மூன்று முறை வட்டி விகிதத்தைக் குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதன் காரணமாக அமெரிக்கப் பணவீக்கம் மார்ச் மாதம் சற்று தணிந்தது.

தற்போது மேலும் ஒருமுறை, இவ்வாண்டிலேயே அதாவது நான்காவது முறை வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வட்டி விகிதம் குறையக் குறைய தங்கத்தின் விலை ஏறும் என்பதே இயல்பு.

தங்கத்தின் விலை உய்ரவு இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது.

வெள்ளிக்கிழமை காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு 185 ரூபாய் உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.8,745க்கு (S$134.08) விற்கப்பட்டது.

அதனால், சவரனுக்கு ரூ.1,480 அதிகரித்து ஒரு சவரன் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 70,000 ரூபாயை நெருங்கியது.

குறிப்புச் சொற்கள்