சிங்கப்பூரின் உயிரோவியத் திரைப்படமான ‘த வயலினிஸ்ட்’ 63வது கோல்டன் ஹோர்ஸ் விருதுகளில் இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.
ஆகச் சிறந்த உயிரோவியத் திரைப்படம், ஆகச் சிறந்த மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதை ஆகிய விருதுகளை வென்றுள்ளது ‘த வயலினிஸ்ட்’.
ஆகச் சிறந்த திரைப்படப் பின்னணி இசை விருதுக்கும் அப்படம் முன்மொழியப்பட்டது. ஆனால், அவ்விருதை மற்றொரு சிங்கப்பூர்த் திரைப்படமான, ஏன்டனி சென்னின் ‘வீ ஆர் ஆல் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ வென்றது.
சிங்கப்பூர் எழுத்தாளரும் இயக்குநருமான எர்வின் ஹான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ‘த வயலினிஸ்ட்’ படத்திற்கானபணிகளை மேற்கொண்டார். வயலின் கலைஞர்களாக உருவெடுக்கவேண்டும் என்ற கனவைக் கொண்ட, இளம் பிள்ளைப் பருவத்திலிருந்தே நண்பர்களாக இருக்கும் இருவரின் வாழ்க்கை எப்படி போர், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் சீர்குலைந்துபோனது என்பதைச் சித்திரிக்கிறது ‘த வயலினிஸ்ட்’.
சிங்கப்பூர் சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் நிறைவு 2015ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது. அதையொட்டித் தயாரிக்கப்பட்ட ‘த வயலின்’ எனும் குறும்படத்திலிருந்து ‘த வயலினிஸ்ட்’ தழுவப்பட்டது.
‘த வயலினிஸ்ட்’, சிங்கப்பூருக்கான ‘காதல் கடிதம்’ என்று ஆகச் சிறந்த மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதை விருதைப் பெற்றுக்கொள்ளும்போது, ஜோர்டன் கேத்தரின் சீயுடன் சேர்ந்து படத்துக்கான கதையை எழுதிய ஹான் வருணித்தார்.
