திருமண வாழ்வின் உன்னதத்தை உணர்த்திய நிகழ்ச்சி

திருமண வாழ்வின் உன்னதத்தை உணர்த்திய நிகழ்ச்சி

1 of 2
படம்: த.கவி
படம்: த.கவி

16 Feb 2025 - 8:14 pm

2 mins read

ஐம்பது ஆண்டுகள் கடந்தும் இணைபிரியாமல் தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்தி வரும் 202 தம்பதிகள் பிப்ரவரி 16ஆம் தேதி ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘கோல்டன் ஜூபிலி’ திருமண விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

மொத்தம் 202 தம்பதிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மொத்தம் 202 தம்பதிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். - படம்: த.கவி

இந்நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவரின் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகி இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வருகை தந்திருந்த தம்பதிகளுடன் இருவரும் உரையாடிப் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவரின் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகி இருவருடன் வருகை தந்திருந்த தம்பதிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவரின் துணைவியார் திருவாட்டி ஜேன் இத்தோகி இருவருடன் வருகை தந்திருந்த தம்பதிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். - படம்: த.கவி

வாழ்வுக்காகக் குடும்பங்கள் மன்றம், திருமணப் பதிவகம், முஸ்லிம் திருமணங்கள் பதிவகம் முதலிய அமைப்புகளால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், திருமணம் செய்ய விரும்பும் தம்பதிகளுக்கான புதிய ஆதரவுத் திட்டங்கள் குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அறிவித்தார்.

நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி உரையாற்றினார். - படம்: த.கவி

திருமண ஆயத்தத் திட்டங்களுக்கு அதிக சலுகை

ஜூலை 1ஆம் தேதி முதல், சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் திருமண ஆயத்தத் திட்டங்களை முடிக்‌கும்போது, அவர்களுக்கு $170 மதிப்பிலான கூடுதல் சலுகை வழங்கப்படும். குறைந்த வருமானத் தம்பதிகளுக்கு முழு மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத்திற்கு உறுதியான அடித்தளமிட தம்பதிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தச் சலுகை அதிகரிக்‌கப்பட்டுள்ளது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அங்கீகாரத்தோடு நடத்தப்படும் திருமண ஆயத்தத் திட்டங்களுக்கு இச்சலுகைகள் பொருந்தும்.

“இந்தத் திருமண ஆயத்தத் திட்டங்கள்வழி தம்பதியர் தங்களின் உறவைச் சிறந்த முறையில் கையாள்வதற்குத் தேவையான திறன்களையும் தகவல்களையும் பெறுவர். தங்களின் ஒருமித்த பயணத்திற்கு முக்கிய அடித்தளத்தை இடவும் உதவும்,” என்று அமைச்சர் மசகோஸ் கூறினார்.

உறுதியான அடித்தளத்துக்கு இணையப் பாடத்திட்டங்கள்

வழங்கப்படும் சலுகைகளுக்கு அப்பால், உறவுகளை வலுப்படுத்த உதவும் புதிய இணையப் பாடத்திட்டங்கள் அனைத்து தம்பதிகளுக்கும் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இது குறித்த தகவல்களைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பின்னொரு தேதியில் அறிவிக்கும்.

வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் திருமணத்தைப் பேணிக்காக்க இருவரின் முயற்சி, கருத்துப்பரிமாற்றம், உறுதியான பொறுப்புணர்வு முதலியவை தேவை என்று அமைச்சர் மசகோஸ் எடுத்துரைத்தார்.

“திருமணத்தின் தொடக்கத்திலிருந்தே உறுதியான அடித்தளத்தை உருவாக்கி, அந்த உறவினை மென்மேலும் நிலைநிறுத்தத் தொடர்ந்து முயற்சி செய்வது முக்கியம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தம்பதிகளின் உறவை வலுப்படுத்தும் முயற்சிகள்

தம்பதிகள் தங்களது உறவை வலுப்படுத்தும் நோக்‌கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்றும் இதுவரை, 10,500க்கும் மேற்பட்ட தம்பதிகள் தங்கள் உறவை மதிப்பீடு செய்ய இணைய மதிப்பாய்வுகளில் கலந்துகொண்டனர் என்றும் அமைச்சர் மசகோஸ் சொன்னார். மேலும், 200க்கும் மேற்பட்ட தம்பதிகள் தங்களது திருமணத்தின் முதல் ஆண்டில் வழிகாட்டுதல் உதவியை நாடியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் மற்றொரு முக்கிய அங்கமாக, வருகை தந்திருந்த அனைத்து 202 தம்பதிகளும் குடும்பத்தார் முன்னிலையில் தங்களின் திருமண உறுதியை மீண்டும் எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து, ஒவ்வொரு தம்பதிக்கும் நினைவுச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன. விருந்து உபசரிப்புடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

குறிப்புச் சொற்கள்
திருமணம்அமைச்சர்அதிபர் தர்மன்தம்பதிகாதல் திருமணம்விழா