சீனாவின் தங்க விடுமுறை வாரத்தின் (China’s Golden Week holiday) முதல் நாளான அக்டோபர் 1ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள மெர்லயன் பூங்காவில் விடுமுறையை அனுபவிக்கும் நோக்கில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பஹாசா இந்தோனீசியா, ஆங்கிலம், பிலிப்பீன்சின் தகலோக், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் பேசினாலும் அவற்றுக்கெல்லாம் மேலாக சீனக் கிளைமொழிகள் ஓங்கி ஒலித்தன.
“பலதரப்பட்ட மக்களையும் உணவையும் எதிர்பார்த்து இங்கு விரும்பி வந்துள்ளோம்,” என்று குவோ என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட செங்டு குடியிருப்பாளர் கூறினார்.
தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் அந்த 32 வயது இளையர், தன்னுடைய காதலியுடன் சிங்கப்பூரில் நான்கு நாள் விடுமுறையைக் கொண்டாடுகிறார்.
அக்டோபர் 1 முதல் அக்டோபர் 7 வரையிலான தங்க வார விடுமுறையைக் கழிக்க, சிங்கப்பூரைச் சிறந்த இடமாகத் தேர்வு செய்து இங்கு வரும் சீனப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2024 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்திருந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 403,120. இது, இங்கு அதிகமாக வரும் இந்தோனீசியா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த 339,000 பயணிகளைவிட அதிகம்.
உள்ளூர் சுற்றுலா நிறுவனங்களும் சுற்றுலாப் பயணத் தளங்களும் சீனப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பாக தங்க வார விடுமுறையில் பயணிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளனர்.
இந்த நிலை இவ்வாண்டு இறுதி வரை வலுவாகத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர், அதன் 2019ஆம் ஆண்டின் 3.6 மில்லியன் உச்சநிலை பயணிகளின் வருகையை எட்ட தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருவதால், ஹோட்டல் அறைகள் மற்றும் பயணிகளை கையாளும் விமான நிலையங்களின் ஆற்றல் அதிகரித்து வருகிறது.
2024ல் ஏழு புதிய ஹோட்டல்களும் 2025ல் மேலும் ஒன்பது ஹோட்டல்களும் கட்டி முடிக்கப்படவிருக்கின்றன. இதனால் சுமார் 3,300 கூடுதல் ஹோட்டல் அறைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாங்கி விமான நிலையத்துடன் 16 விமான நிறுவனங்கள் மூலமாக 31 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று சாங்கி விமான நிலைய குழுமம் (சிஏஜி) தெரிவித்தது. ஒவ்வொரு வாரமும் 430க்கும் மேற்பட்ட விமானங்கள் சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்கின்றன.
அக்டோபர் 1ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேசியதில் பொதுவாக பெய்ஜிங், செங்டு, ஷென்ஷென் ஆகிய இடங்களிலிருந்து சீனப் பயணிகள் அதிகமாக சிங்கப்பூர் வருகின்றனர்.
சராசரியாக, அவர்கள் நான்கு முதல் ஆறு நாள்கள் தங்கியிருக்கின்றனர்.
திரு குவோ, அவரது காதலி உள்ளிட்ட பல சீனப் பயணிகள், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், செந்தோசா, ஆர்ச்சர்ட் ரோடு, மரினா பே சேண்ட்ஸ், கரையோரப் பூந்தோட்டங்கள், யுனிவர்சல் ஸ்டுடியோ ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்க விரும்புகின்றனர்.
கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அன்று சீனாவும் சிங்கப்பூரும் தங்களுடைய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சுதந்திரமாக பயணம் செய்வதற்கு ஏதுவாக விசா விதிமுறைகளைத் தளர்த்திய எட்டு மாதங்களில் சீனப் பயணிகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.