புனித வெள்ளி, சிங் மிங் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 3ஆம் தேதிமுதல் 5ஆம் தேதிவரை மலேசியாவுக்கு நிலவழிச் சோதனைச்சாவடிகள் வழியாகச் செல்லும் பயணிகளுக்குப் போக்குவரத்து நெரிசலால் காத்திருப்பு நேரம் நீட்டிக்கும்.
உலகளவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில்கொண்டு, அனைத்துச் சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்புச் சோதனைகளை முடுக்கிவிட்டிருப்பதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் திங்கட்கிழமை (மார்ச் 30) கூறியது.
பயணிகள், குடிநுழைவைக் கடந்துசெல்ல நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம் என்றும் அது தெரிவித்தது. பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், நிலவழிச் சோதனைச்சாவடிகளில் உள்ள போக்குவரத்து நிலவரத்தைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு அருகில் மறுமேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகத் தற்போது கட்டுமான, சாலைப் பணிகள் நடப்பதாகவும் ஆணையம் கூறியது.
நிலவழிச் சோதனைச்சாவடிகளில் நெரிசலைத் தவிர்க்க வாகனம் ஓட்டுவதற்குப் பதிலாக, எல்லை தாண்டிய பேருந்துச் சேவைகளை எடுப்பதற்குப் பயணிகள் வலுவாக ஊக்குவிக்கப்படுகின்றனர்.
கடந்த மார்ச் 13ஆம் தேதிக்கும் மார்ச் 22ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், மார்ச் பள்ளி விடுமுறை, நோன்புப் பெருநாள் வார இறுதியின்போது, உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளை ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் கடந்துசென்றனர்.
அந்தக் காலகட்டத்தில், கார்களில் பயணம் செய்தோர் உச்ச நேரங்களில் குடிநுழைவைக் கடந்துசெல்ல மூன்று மணி நேரம்வரை காத்திருந்ததாக ஆணையம் தெரிவித்தது.
கடந்த மார்ச் 18ஆம் தேதி போக்குவரத்து ஆக அதிக நெரிசலாக இருந்தது. அன்று குடிநுழைவை 564,000க்கும் அதிகமான பயணிகள் கடந்துசென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

