சிங்கப்பூர், ‘குவாண்டம்’ (Quantum) தொழில்நுட்பத்தில் 20 ஆண்டுகளுக்குமுன் செய்த முதலீட்டுக்குத் தற்போது கைமேல் பலனை அனுவிப்பதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.
‘குவாண்டம்’ தொழில்நுட்பம் ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோதே சிங்கப்பூர் அதில் துணிச்சலுடன் முதலீடு செய்ததைச் சுட்டிய திருவாட்டி டியோ, நிதிச் சேவைகள், மருத்துவம் போன்ற துறைகளில் முக்கிய மாற்றங்களைச் செய்ய அத்தகைய முதலீடு அவசியமாக இருந்தது என்றார்.
‘தேசிய குவாண்டம் கூட்டமைப்பு ஃபெளண்டரி’ தொழில்துறை நாளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் டியோ உரையாற்றினார்.
“2007ல், குவாண்டம் தொழில்நுட்பங்களுக்கான நிலையத்தை அமைத்து தேசிய அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டோம். 2024ல், தேசிய குவாண்டம் ஸ்ட்ரெட்டஜி தளத்தை அறிமுகம் செய்தோம்,” என்ற திருவாட்டி டியோ, குவாண்டம் தொழில்நுட்பங்களுக்கு சிங்கப்பூர் $300 மில்லியனை ஒதுக்கியது என்றார்.
தற்போது தேசிய குவாண்டம் கூட்டமைப்பு ஃபெளண்டரி, தேசிய அளவில் குவாண்டம் திட்டங்களை வகுக்கிறது என்றும் சிங்கப்பூருக்குத் தனித்துவமான திறன்களை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்துலக ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் திருவாட்டி டியோ வலியுறுத்தினார்.
ஆய்வில் முதலீட்டைப் பெருக்க தேசிய குவாண்டம் ஸ்ட்ரெட்டஜி தளத்தை மறுஆய்வு செய்வதாகக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூருக்கும் முன்னணி குவாண்டம் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவிருப்பதையும் சுட்டினார்.
“தேசிய அளவிலான குவாண்டம் திட்டங்களையும் மேம்படுத்தவிருக்கிறோம். முக்கியத் தொழில்[Ϟ]நுட்பங்களை உருவாக்கி, உலக அரங்கில் சிங்கப்பூரை முன்னிலைப்படுத்தும் முயற்சியைத் தீவிரப்படுத்துவோம்,” என்றார் அமைச்சர் டியோ.

