சிங்கப்பூரின் எஸ்டி என்ஜினியரிங் குழுமம் இரண்டாம் அரை ஆண்டில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கிறது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முழு ஆண்டிலும் சாதகமான நிகர லாபம் கிடைக்கும் என ஏற்கெனவே நவம்பர் 12ஆம் தேதி குழுமம் முன்னுரைத்து இருந்தது. அந்த முன்னுரைப்பின் அடுத்தகட்டமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) தனது எதிர்பார்ப்பை அது வெளியிட்டுள்ளது.
அடிப்படைச் செயல்பாட்டுத் திறன் வலுவாக இருப்பதே லாபம் ஈட்டுவதற்கான முக்கியக் காரணம் என்று நவம்பர் மாத முன்னுரைப்பில் அது கூறியிருந்தது. அதற்கு ஆதாரமாக செப்டம்பர் 30 வரையிலான ஒன்பது மாதத்தில், ஆண்டுக்காண்டு அடிப்படையில் குழுமம் 9 விழுக்காடு கூடுதல் வருவாயை ஈட்டியிருந்தது. அதன் விளைவாக, அந்த ஒன்பது மாதத்தில் மட்டும் அதன் வருவாய் $9.1 பில்லியனைத் தொட்டது.
தனது மூன்று வர்த்தகப் பிரிவுகளின் வேகமான செயல்பாடு காரணமாக அந்த வருவாய் சாத்தியமானதாக அது கூறியிருந்தது. அந்த மூன்று பிரிவுகளில் ஒன்று வர்த்தக வான்வெளித் துறை. அது ஒன்பது மாதத்தில் 11 விழுக்காடு வருவாயை ஈட்டியது.
அதேபோல, தற்காப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புத் துறை 9 விழுக்காடும் நகர்ப்புற மின்னிலக்கத் தீர்வுகள் மற்றும் செயற்கைக்கோள் தொடர்புத் துறை 5 விழுக்காடும் அதிக வருவாயைப் பதிவு செய்தன.
லாபத்தைப் பங்குதாரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகப் பங்கின் விலையில் ஐந்து விழுக்காட்டை ஈவுத்தொகையாக வழங்கக் குழுமம் முடிவுசெய்துள்ளது. அந்த ஈவுத்தொகை மட்டும் $156 மில்லியன் என்று குழுமம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

