தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விதிமீறிய சரக்கு வாகன ஓட்டுநர்கள்; 121 அழைப்பாணைகள் பிறப்பிப்பு

2 mins read
3b312b9f-ff3a-489a-859b-0839de4bb01b
மொத்தம் 166 சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்/ ஃபேஸ்புக்

போக்குவரத்துக் காவல்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் இணைந்து நடத்திய மூன்று நாள் அமலாக்க நடவடிக்கையில், விதிமீறிய சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 18ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தீவெங்கும் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையின் விளைவாக மொத்தம் 121 அழைப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

மொத்தம் 166 சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டதாகக் காவல்துறை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

வேக வரம்பை மீறியது, வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியது, சாலையில் இடது பக்கத்தில் வாகனத்தை ஓட்டத் தவறியது, வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளை ஒழுங்காகக் கட்டாமல் இருந்தது, வேக வரம்பு ஒட்டுவில்லையை வாகனத்தின் முன்பகுதியின் மேல் வலது பக்கத்தில் ஒட்டத் தவறியது போன்ற போக்குவரத்துக் குற்றங்களுக்காக அழைப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிலப் போக்குவரத்து ஆணையம் தொடர்பான 93 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றிச் சென்ற வாகனங்களும் அனுமதி இல்லாது விரைவுச்சாலைகளில் சென்ற வாகனங்களும் அடங்கும். பாரந்தூக்கிகளும் சிமெண்ட் லாரிகளும் அவற்றில் அடங்கும்.

சரக்குகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களில் எடை 12,000 கிலோவுக்கும் அதிகமாக இருந்தால் அந்த வாகனங்களில் வேக வரம்புச் சாதனம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால் அது போக்குவரத்துக் குற்றமாகும் என்று காவல்துறை தெரிவித்தது.

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் 2,600 கனரக வாகனங்கள் வேக வரம்புச் சாதனத்தைப் பொருத்த வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை கூறியது. ஆனால் இதுவரை 231 கனரக வாகனங்கள் மட்டுமே அவ்வாறு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்