சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் பேரழிவுக் காட்சிகள், கரையோரப் பூந்தோட்டங்களில் தீச்சம்பவம், மரினா பே சேண்ட்ஸ் உல்லாசத் தலத்திற்கு அருகே இடிந்து விழுந்த பாலம் - இவை எதுவும் உண்மையாக நடக்கவில்லை, ஆனால், ஒரே ஒரு வரியைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டளையை வைத்து யார் வேண்டுமானாலும் அத்தகைய மிக யதார்த்தமான படங்களை உருவாக்கலாம்.
செயற்கைக்கோள் படங்களைக் கொண்ட ‘கூகல் எர்த்’ இணையத்தளத்தில், ‘நானோ பனானா’ (Nano Banana) எனும் கூகலின் சொந்த ‘ஏஐ’ மென்பொருள் கருவியை நேரடியாகப் பயன்படுத்தி, பயனர்கள் அத்தகைய படங்களை உருவாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை கூகல் அறிமுகப்படுத்தியிருந்தது.
இருப்பினும், அதனை அறிமுகப்படுத்திய ஏறக்குறைய 24 மணி நேரத்திற்குப் பிறகு, கூகல் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அதன் செயல்பாட்டை நிறுத்தியது.
வியாழக்கிழமை வெளியிட்ட அதன் முதற்கட்ட அறிவிப்பில், ஒரு புதிய அக்கம்பக்கப் பகுதியைக் கற்பனை செய்து பார்ப்பது அல்லது சொத்துச் சந்தை வரைவுத்திட்டத்தை உருவாக்குவது போன்ற பயன்பாடுகளுக்காகவே அந்த அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக கூகல் கூறியிருந்தது.
ஆனால், அந்த அம்சம் தவறான தகவல்களை மிக எளிதாகவும் வேகமாகவும் உருவாக்க வழிவகுக்கும் என்று இதழியல், செயற்கை நுண்ணறிவுத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களிடமிருந்து உடனடியாகக் குறைகூறல்கள் எழுந்தன.
அது நன்மையைவிட அதிகத் தீங்கையே விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய அம்சத்தின் செயல்பாட்டை நிறுத்தி, வலவான பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக கூகல் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

